ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து 21இல் நாடாளுமன்றில் விவாதம்!

ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து 21இல் நாடாளுமன்றில் விவாதம்!
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவரவுள்ளது.
செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 21ஆம் திகதி அரசமைப்பு சபையின் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய  தினம் சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரே மேற்படி பிரேரணை வரவுள்ளது.
மியன்மாரில் ரக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகப் பல வழிகளிலும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எனினும், இது விடயத்தில் அந்நாட்டு அரசு மௌனம் காத்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கிளர்ச்சிக் குழுக்களை அடக்கும் போர்வையில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் ரோஹிங்யா முஸ்லிம்கள், அயல்நாடான பங்களாதேஷை நோக்கி அகதிகளாகப் படையெடுக்கின்றனர். இதனால் பங்களாதேஷ் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையை நோக்கியும் அகதி அந்தஸ்து கோரி மக்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர். இதுவரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி ரோஹிங்யா முஸ்லிம் விவகாரம் தற்போது சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எகிப்து உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதிக்கப்பட்டுள்ள  ஒடுக்கப்பட்டுள்ள  நீதிக்காகப் போராடும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச  சமூகத்தினதும் இலங்கை அரசினதும் கவனத்தை இது விடயத்தில் ஈர்க்கும் நோக்கிலும் மேற்படி பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்