திசாரா பெரேராவின் அதிரடி ஆட்டம்! உலக அணிக்கு வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்று(13) நடைபெற்ற 2-வது T-20 போட்டியில் உலக பதினொருவர் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக பதினொருவர் அணி பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி, திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக பதினொருவர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 23 ஓட்டங்களில் சோஹைல் கான் பந்தில் சோயிப் மாலிக்கிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ஓட்டங்களில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லா 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேப்டன் டூபிலஸிஸ் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலக பதினொருவர் அணி 14 ஓவர்களில் 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அடுத்து களமிறங்கிய திசாரா பெரேரா – ஹாசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

உலக பதினொருவர் அணி 19.5 ஓவரின் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹாசிம் அம்லா 72 ஓட்டங்களுடன் அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்.

உலக பதினொருவர் அணியின் திசாரா பெரேரா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, எதிர்வரும் 15ம் திகதி நடைபெறுகிறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்