இலங்கையில் தொடரும் சித்திரவதை, அரசாங்கத்திற்கு நெருக்கடி –

தம்முடன் மிகச் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்படும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

மனித உரிமை மீறல்கள் காரணமாக கடந்த ஏழு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச் சலுகையை மீள வழங்கியதை அடுத்து ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலமைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்தது.

இந்த உயர் மட்டக்குழுவின் பத்து நாள் விஜயத்தின் இறுதிநாளான நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சந்தித்தனர்.

மனித உரிமைகள் விடையத்திலும் தொழிலாளர் உரிமைகளிலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பாராட்டத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எனினும் தேவையான பல மறுசீரமைப்புக்களை இன்னமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்திருக்கின்றனர்.

சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்காவிற்கான தூதுவர் துங் லாய் மார்க் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலான சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமொன்றை தயாரிப்பதுடன் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகள் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மாத்திரமன்றி கிளிநொச்சியில் 200 நாட்களையும் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த ஏழாம் திகதி நேரில் சென்று சந்திருந்தனர்.

போரின் இறுதிநாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது மற்றும் இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை உடனடியாக விடுவிப்பது ஆகிய விடையங்கள் தேசிய நல்லிணக்க செயற்பாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பேருதவியாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா பிரதமருக்கு எடுத்துரைத்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரிச் சலுகையை தொடர்ந்தும் ஸ்ரீலங்கா அரசு அனுபவிக்க வேண்டுமானால் மனித உரிமைகளை உறுதிபடுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு இணக்கம் தெரிவித்துள்ள விடையங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பிரதமரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட அதிகாரிகளின் பத்து நாள் விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்