கிழக்கு மாகாண  சபையினால்  வழங்கப்பட்ட அரச நியமனங்களில் புறக்கணிக்கப்பட்டும் ரொட்டவெவ கிராம இளைஞர்கள்

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண  சபையினால்  வழங்கப்பட்ட அரச நியமனங்களில் ரொட்டவெவ கிராம இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக   ரொட்டவெவ இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் நடை பெற்ற காலப்பகுதியிலும்  கடந்த   2012ம் ஆண்டு நடைபெற்ற  கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போதும்  அரசியல் வாதிகளினால் வழங்கப்பட்ட கோரிக்கைகளும்-வாக்குறுதிகளும் கிழக்கு மாகாண சபையின் காலம் முடிவடையும் கால கட்டத்தில் இருக்கின்ற நிலையிலும் கூட  வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும்  நிறைவேற்றப்படவில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவில் அரச வைத்தியசாலைகள்-ஆயுர் வேத வைத்தியசாலைகள்- மிருக வைத்தியசாலை- நீர் பாசன திணைக்களங்கள்- கமநல சேவைகள் திணைக்களங்கள்-பாடசாலைகள்- பொது நூலகங்கள்- தபால் கந்தோர் போன்ற அரச அலுவலகங்கள் இருக்கின்ற போதிலும் அதில் காணப்பட்ட சில வெற்றிடங்களுக்காக வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இளைஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ரொட்டவெவ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி தகைமையுடைய இளைஞர்கள் தொழிலின்றி திண்டாடும் வேளை மொறவெவ பிரதேசத்தில் காணப்படுகின்ற அரச காரியாலங்களுக்கு  சிற்றூழியர் பதவிகளுக்கு கூட தூர இடங்களில் உள்ளவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனாலும்  தகைமையுடைய இளைஞர்கள் பிரதேசத்தில் உள்ள போதிலும் ரொட்டவெவ இளைஞர்களுக்கு  நியமனம் வழங்கப்படாமையானது கிழக்கு மாகாண சபை ரொட்டவெவ கிராமத்தையே புறக்கணிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் காலங்களில்  அரசியல் வாதிகள் வருகை தந்து இளைஞர்களின் தொழில் வாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறி விட்டு கிராம மக்களை பொய் கூறி வாக்குகளை திருடிவிட்டு வெற்றி பெற்றதும் “நீ யாரோ  நான் யாரோ ” என நினைத்துக்கொண்டு தங்களுடைய பிரதேச இளைஞர்களுக்கு மாத்திரம் சேவைகளையும் தொழில் வாய்ப்புக்களையும் செய்து வருகின்றனர்.
தமது பிள்ளைகளை படிப்பிப்பதற்காக வேண்டி சேனைப்பயிர்ச்செய்கையிலும்.மீன்பிடியிலும் இரவோடு இரவாக  கண்விழித்து மழை வெயில் என பாராமல் காடு. மேடு என பாராமல் கரடிக்கு பயந்து தேன் எடுத்தும் சீவியத்தை கழித்து பிள்ளைகளை படிப்பித்து பிள்ளைகள் எதிர்காலத்திலாவது பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் படிப்பித்த எமக்கு அரசியல் வாதிகளும் –கிழக்கு மாகாண சபையும் செய்யும் செயலானது
கிராம மக்களின்  மனங்களை  புன்படுத்தும் செயல் எனவும் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் வாக்குறுதி அழித்த அரசியல் வாதிகளும்-  கிழக்கு மாகாண சபையும் ரொட்டவெவ இளைஞர்களின் தொழில் வாய்ப்பில் அக்கறை செலுத்தி பிரதேசத்தில் இருக்கின்ற அரச காரியாலங்களுக்கு சிற்றூழியர் வெற்றிடங்களுக்காவது நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்