புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தடுக்கப்படுமாயின் மீள்வன்முறைக்கு வழிகோலும்: சம்பந்தன்

அதிகார பகிர்வானது ஒன்றுபட்ட, பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் என நம்புவதாகவும் மாறாக இந்த முயற்சிகள் தவறாக கையாளப்பட்டு தடுக்கப்படுமாயின் மீள்வன்முறை ஏற்படுவதை தடுக்க முடியாது போய்விடும் எனவும் எதிர்க் கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே சம்பந்தன் இந்த விடயத்தை கூறியதாக அவரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்து ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமைச்சருக்கு சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலையில் இந்த மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணமாக இருப்பதே சிறந்தது எனவும் அவா் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார். அரசியல் யாப்பில் பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கபட்டுள்ளமையினால் இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்படுவதில் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல மக்களினதும், இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக்கூடியவாறான ஒரு அதிகார பகிர்வையே கூட்டமைப்பு வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அதிகாரங்கள் எந்த வகையிலும் மீளப் பெறப்பட கூடாது என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், அதிகார பகிர்வானது ஒன்றுபட்ட, பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் எனவும் இரா. சம்பந்தன் கூறினார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது அவசியம் என்பதனை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இந்த விடயத்தில் தவறிழைத்தால் அது வன்முறையின் மீள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வை காண தவறும் பட்சத்தில் மேலும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை தோன்றும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய இராச்சியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட், புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்