தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்ன?- கேப்டன் விராட் கோலி தகவல்.

ஒவ்வொரு விதமான போட்டிக்கும் சரியான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதே இந்திய அணி தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அனுப்பினார். இதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அந்த அணியில் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 42 ரன்களைக் குவித்தார். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர் 8, மேக்ஸ்வெல் 17, டிராவிஸ் ஹெட் 9, ஹென்ரிக்ஸ் 8, கிறிஸ்டியான் 9 ரன்களில் அவுட் ஆனார்கள். இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது குறுக்கிட்ட மழை நீண்ட நேரம் நீடித்ததால், ஓவர்கள் குறைக்கப்பட்டன. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, இந்திய அணி வெற்றிபெற 6 ஓவர்களில் 48 ரன்களை எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடவந்த இந்திய அணி 5.3 ஓவர்களில் 49 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். ஷிகர் தவண் 15 ரன்களுடனும், விராட் கோலி 22 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களை வீசி 16 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் பெறும் முதலாவது ஆட்ட நாயகன் விருதாகும் இது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 போட்டிகளில் இந்தியா பெற்ற 50-வது வெற்றியாகவும் இது அமைந்தது. இதுவரை 84 போட்டிகளில் ஆடி 50 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் ஏற்கெனவே டி20 போட்டிகளில் 50 ஆட்டங்களில் வென்று சாதனை படைத்துள்ளன.

முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு விதமான போட்டிக்கும் சரியான வீரர்களைத் தேர்ந்தெடுப்பது இந்திய அணியின் தொடர் வெற்றி களுக்கு ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் வீரர் களுடன் அணியின் நிர்வாகத்துக்கும் இந்திய அணியின் வெற்றிகளில் பங்கு உள்ளது. முதல் டி20 போட்டியின் ஆரம்ப கட்டத்தில் புவனேஸ்வர் குமாரும், பும்ராவும் சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் தொடங்கி வைத்ததை மற்ற வீரர்கள் சிறப்பாக முடித்தனர். மனைவியின் உடல்நிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த ஷிகர் தவண், மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இப்போட்டியில் 15 ரன்களை மட்டுமே எடுத்தாலும், அது அவருக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களை மட்டுமே எடுத்ததால் 6 ஓவர்களில் இந்திய அணியின் இலக்கு 40 ரன்களுக்குள்தான் இருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 48 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விதியை புரிந்துகொள்ள முடியவில்லை. 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு கடினமாகவே இருந்தது.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

இந்திய வீரர் ஷிகர் தவண் கூறும்போது, “இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகவும் வலிமையாக உள்ளது. அனுபவம் மிக்க வீரர்களும், இளம் வீரர்களும் சரியான சதவீதத்தில் கலந்துள்ளது அணியின் வெற்றி களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அனுபவமிக்க வீரர்களின் வழிகாட்டுதலில், இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இளம் வீரர்கள் பலர் கிடைத்ததற்கு ஐபிஎல் போட்டிகளும் காரணம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்