உண்ணாவிரதப் போராட்டக் கைதிகளை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் மாவை எம்.பி.

 
 
உண்ணாவிரதமிருக்கும் நிலையில் அநுராதபுரம் சிறையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கும்  மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று நேரில் சென்று சந்தித்தார்.
அந்தக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி  சட்டமா அதிபர் திணைக்களம் எதேச்சதிகாரமாக நடப்பதுபோலத் தெரிகிறது எனக் குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கூட்டமைப்பு நேரடியாகப் பேச்சு நடத்தி நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் என்றும் அக்கைதிகளிடம் தெரிவித்தார்.
“அரசியல்  கைதிகளின் கோரிக்கை தொடர்பில் சுமந்திரன் எம்.பி., சட்டமா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தார். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கை வவுனியாவுக்கு மாற்றமுடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
சாட்சிகளுக்கு அச்சுறுத்தலெனில் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியேனும் வழக்கை வவுனியாவிலேயே நடத்தவேண்டுமேயன்றி அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவது தீர்வாகாது என்பதை சட்டமா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், அதற்கு சட்டமா அதிபர் சாதகமான பதிலை வழங்கவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும்தான் பேசமுடியும்.
பிரதமர் நாடு திரும்பியவுடன் அவருடனும் ஜனாதிபதியுடனும்  கூட்டமைப்பு விரைவில் இவ்விடயம் தொடர்பில் பேச்சு நடத்தும்” என்று மாவை எம்.பி. மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்