வரிசை கட்டும் இரண்டாம் பாகப் படங்கள் : இத்தனை ஏன்… ?

தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாகத்தின் ‘டிரென்ட்’ போய்க் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே இந்த இரண்டாம் பாகம் கலாச்சாரம் ஆரம்பமானாலும் சமீப காலங்களில் பலரும் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சமீபத்தில் என்று சொன்னால் ‘காஞ்சனா’ படத்தின் இரண்டாம் பாகம் 2015ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகுதான் பலரும் இதற்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களை ஏன் இரண்டாம் பாகமாகவும் உருவாக்கக் கூடாது என வரிசை கட்டி வர ஆரம்பித்தார்கள்.

கல்யாணராமன்
இதுவரை பல இரண்டாம் பாகத் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. 1979ம் ஆண்டில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த ‘கல்யாணராமன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்ற பெயரில் கமல்ஹாசன், ராதா நடிக்க 1985ம் ஆண்டு வெளிவந்து தோல்வியைத் தழுவியது.

பில்லா
ரஜினிகாந்த் நடித்து 1980ம் ஆண்டு வெளிவந்த ‘பில்லா’ படம் அஜித் நடிக்க ‘பில்லா 2007’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக்கானது. இந்த ‘பில்லா 2007’ படத்தின் இரண்டாம் பாகமாக 2012ம் ஆண்டு ‘பில்லா 2’ வெளிவந்து படுதோல்வி அடைந்தது.

1989ம் ஆண்டு பிரேம் நடித்து வெளிவந்த ‘குரோதம்’ படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் 2000ம் ஆண்டில் வெளிவந்தது பலருக்கும் ஞாபகம் இருக்காது.

ஜெய்ஹிந்த்
1994ம் ஆண்டு அர்ஜுன் இயக்கி நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படம் வெளிவந்தது. 2014ம் ஆண்டு ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தை இயக்கி நடித்து வெளியிட்டார் அர்ஜுன். இப்படி ஒரு படம் வந்தது பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஜித்தன்
2005ம் ஆண்டில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ரமேஷ், பூஜா மற்றும் பலர் நடித்த ‘ஜித்தன்’ படம் வெளிவந்து குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது. 2016ம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போனது.

சென்னை 28
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய நண்பர்கள் பலரும் நடித்த ‘சென்னை 28’ படம் கலகலப்பாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது. 2016ம் ஆண்டு ‘சென்னை 28 இரண்டாம் இன்னிங்ஸ்’ எனப் பெயரிட்ட இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது.

நான் அவன் இல்லை
2007ம் ஆண்டில் செல்வா இயக்கத்தில் ஜீவன், சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடிக்க ‘நான் அவன் இல்லை’ படம் வெளிவந்தது. இப்படம் ஜெமினிகணேசன் நடிக்க பாலசந்தர் இயக்கத்தில் 1974ம் ஆண்டு வெளிவந்த ‘நான் அவனில்லை’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ல் ஜீவன் நாயகனாக நடிக்க வேறு நாயகிகளுடன் ‘நான் அவன் இல்லை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார் இயக்குனர் செல்வா. முதல் பாகம் போல இந்தப் படம் வெற்றி பெறவில்லை.

பசங்க
2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பசங்க’ படம் வித்தியாசமான படமாக அமைந்து தேசிய விருதுகளையும் பெற்றது. 2015ல் வெளிவந்த ‘பசங்க 2’ படத்திற்கு முதல் பாகத்திற்குக் கிடைத்த பேரும், புகழும் கிடைக்கவில்லை.

சிங்கம்
2010ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்து வெளிவந்த ‘சிங்கம்’ படம் வசூல் ரீதியாக சூர்யாவுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதன் பின் ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2017ம் ஆண்டிலும் வெளிவந்தது. 2 மற்றும் 3வது பாகங்கள் பெரிய வெற்றி பெறவில்லை, இருந்தாலும் 4ம் பாகமும் வரும் என்று கூறியிருக்கிறார்கள்.

கோ
2011ம் ஆண்டு கேவி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படம் அற்புதமான அரசியல் படமாக வெற்றி பெற்றது. 2016ல் பாபிசிம்ஹா நடித்து வெளிவந்த ‘கோ’ படம் வராமலே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ண வைத்தது.

2012ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘பீட்சா’ படம் ஒரு டிரென்ட் செட்டராக அமைந்தது. 2013ம் ஆண்டில் அசோக்செல்வன் நடித்து வெளிவந்த ‘பீட்சா 2’ பார்க்கப்படாமலே கடந்து போனது.

விஐபி
2013ம் ஆண்டில் தனுஷ், அமலா பால் நடித்து வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் சூப்பரான வெற்றியைப் பெற்றது. 2017ல் வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தோல்வியைத்ததான் தழுவியது.

அரண்மனை
2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா, சந்தானம் நடித்து வெளிவந்த ‘அரண்மனை’ படம் வியாபார ரீதியாக நல்ல வசூலைத் தந்தது. 2016ல் வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் சுமாரான வசூலைக் கொடுத்தது.

டார்லிங்
2015ம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமான ‘டார்லிங்’ படம் அவருக்கு நடிகராக நல்ல அறிமுகத்தையும் கொடுத்து வசூலையும் கொடுத்தது. 2016ம் ஆண்டில் வேறு நடிகர்கள் நடித்து வெளிவந்த ‘டார்லிங் 2’ படம் தோல்வியைத்தான் தழுவியது.

வரிசை கட்டியுள்ள இரண்டாம் பாகம் படங்கள்…

இதுவரை இவ்வளவு இரண்டாம் பாகத் திரைப்படங்கள் வந்து பெரும்பாலும் அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவினாலும் பலருக்கும் இரண்டாம் பாகத்தை எடுத்துதான் பார்ப்போமே என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக…

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ முடிவடையும் தருவாயில் உள்ளது.

2006ம் ஆண்டில் சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் நடித்த ‘திருட்டுப் பயலே’ எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இப்போது 11 வருடங்களுக்குப் பிறகு சுசிகணேசன் பாபிசிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடிக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

2014ம் ஆண்டு வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ படம் பலரையும் ஆச்சரியப்படுத்திய படமாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சதுரங்க வேட்டை 2’வில் அரவிந்த்சாமி, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

2013ம் ஆண்டில் சரத்குமார், பிரசன்னா மற்றும் பலர் நடித்த ‘சென்னையில் ஒரு நாள்’ படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. இப்போது சரத்குமார் நடிக்க ‘சென்னையில் ஒரு நாள் 2’ம் பாகம் தயாராக வெளியீட்டிற்குக் காத்துக் கொண்டிருக்கிறது.

2013ம் ஆண்டில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் தயாரிப்பில்தான் உள்ளது. இந்த ஆண்டாவது வெளிவரும் என கமல்ஹாசன் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியின் ‘இந்தியன் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி, விக்ரம் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சாமி ‘ படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டது.

‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தை ஓவியா நாயகியாக நடிக்க அறிவித்துவிட்டார் ராகவா லாரன்ஸ்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிக்க ‘மாரி 2’ படம் நவம்பரில் ஆரம்பமாக உள்ளது.

சுந்தர் .சியின் கலகலப்பான நகைச்சுவைப் படமான ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் காரைக்குடியில் பரபரப்பாக நடந்து வருகிறது.

லிங்குசாமி, விஷால் கூட்டணியின் ‘சண்டக் கோழி 2’ படம் சென்னையில் உள்ள மதுரை அரங்கில் படமாகி வருகிறது.

வடிவேலுவுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ ஆரம்பமாகி உள்ளது.

பிரபுதேவா – சக்தி சிதம்பரம் கூட்டணியில் சார்லி சாப்ளின் 2 உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ‘ராஜதந்திரம் 2, தமிழ்ப் படம் 2’ என மேலும் சில இரண்டாம் பாகப் படங்களும் தயாரிப்பில் உள்ளன.

புதிய கதைகளைத் தேடி, அதற்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்து ‘ரிஸ்க்’ எடுத்து படத்தைக் கொடுப்பதை விட, ஏற்கெனவே ரசிகர்களைக் கவர்ந்த சில படங்களின் இரண்டாம் பாகம் என்பது இன்றைய விமர்சன யுகத்தில் தப்பிப்பதற்கான சிறந்த வழிதான்.

இருந்தாலும் ஏற்கெனவே வெளிவந்து தோல்வியடைந்த இரண்டாம் பாகப் படங்களையும் மனதில் வைத்துக் கொண்டு முற்றிலும் வேறாக கொடுத்தால்தான் முதல் பாக வெற்றி ராசி, இரண்டாம் பாகத்திலும் தொடரும்….!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்