அட்டாளைசேனை பிரதேச செயலகத்தின் நிகழ்வில் அலட்சியம் செய்யப்பட்ட இந்து சமய பிரார்த்தனை!

 

ஜனாதிபதி செயலகத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி  மறுமலர்ச்சி வாரத்தின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது இந்து சமய குருமார்கள் எவரும் பிரார்த்தனை மேற்கொள்ள ஆத்மீக அதிதிகளாக அழைக்கப்பட்டு இருக்கவில்லை.

அரசாங்க அலுவலகங்களில் நடத்தப்படுகின்ற விழாக்களில் சர்வசமய பிரார்த்தனைகள் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி திட்டங்களில் சர்வசமய பிரார்த்தனைகள் கண்டிப்பாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு இஸ்லாமிய பிரார்த்தனைகளை மேற்கொள்ள மௌலவி ஒருவர் அழைக்கப்பட்டு இருந்தார். அதே போல பௌத்த பிரார்த்தனைகளை மேற்கொள்ள தீகவாவி பிரதம பிக்கு அழைக்கப்பட்டு இருந்தார். முதலில் மௌலவி இஸ்லாமிய பிரார்த்தனைகளை மேற்கொண்டார். அடுத்து பிக்கு பௌத்த பிரார்த்தனைகளை மேற்கொண்டார். ஆனால் இந்து சமய பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கு எவரும் பிரதேச செயலகத்தால் அழைக்கப்பட்டு இருக்கவில்லை என்பது அப்பொழுதுதான் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர் நிலைமையை சமாளிப்பதற்காக கிராம சேவையாளர் ஒருவரை பிரதேச செயலாளர் பெயர் சொல்லி அழைத்து இந்து சமய பிரார்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் மேடைக்கு வந்த கிராம சேவையாளரோ இந்து சமய பிரார்த்தனைகளை மேற்கொள்ளாமல் அவருடைய வாழ்த்து செய்தியை தெரிவித்து விட்டு சென்றார்.

இதே நேரம் பௌத்த பிரார்த்தனையை நடத்திய பிக்குவையும், இப்பிக்குவோடு வந்திருந்தவர்களையும் தவிர வேறு பௌத்தர்கள் இவ்விழாவுக்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதுடன் கிறிஸ்தவ சமய பிரார்த்தனை குறித்து பிரதேச செயலக அதிகாரிகள் பொருட்படுத்தி இருக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்