அரசியல் கைதிகளின் விடுதலை இழுத்தடிப்பு: சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சாடுகிறது அரசு.

“தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த, ஏனைய கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும், அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.”
– இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடருமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
15 வருடங்களுக்கு அதிகமாக தமிழ்க் கைதிகள்  சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களின் வாழ்வின் பாதிக்காலம் வீணாகிவிட்டது. இவர்களை விடுவிக்குமாறு நான் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளேன்.
குற்றமற்றவர்களைத் தடுத்துவைத்தல் என்பது நியாயமான செயற்பாடல்ல, இதற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜே.வி.பியின் வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலையானவர்கள் கடந்தகாலங்களில் அக்கட்சியின் வன்முறைகளில் மீண்டும் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
எனினும், புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் எனத் தகவல் இல்லை.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் அணியின் தலைவர் தமிழினி எழுதிய புத்தகத்தை வாசித்தால் பல்வேறு விடயங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்