ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது! – வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

 

“சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது சட்டப்படி கண்டனத்திற்குரியது. ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும்போது சாட்சிகள் பயந்து வரத் தயங்குகின்றார்கள் என்பது நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்களது வதிவிடங்களில் சேர்ப்பிக்கமுடியும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்’ என்ற தலைப்புடன் அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதிமொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கிவிட்டால் அதன்கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை உடனே பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாக இருந்திருக்கும். ஏனென்றால், எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான ஷரத்துகளே குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இதுகாறும் இருந்துவந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். அதாவது, எமது வழமையான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்திலேயே அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டாம் விடயம், தற்பொழுது அநுராதபுரத்தில் விளக்கத்திற்காக அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிரச்சனை. முன்னையது பொது என்றால் இது குறிப்பிட்ட கைதிகளோடு தொடர்புடையது.

2009இல் இருவர் கைதுசெய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைதுசெய்த பின் 2012இல் குற்றச்சாட்டுப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு ஈற்றில் மூன்று நாட்களுக்கு தொடர் விளக்கமளிக்கப்பட்டு வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்துக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் ஆணை வழங்கியுள்ளார். இது ஒரு பொறுப்பற்ற செயல். வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி வேண்டாவெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றினார். காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்றது.

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, முன்னரே கைதுசெய்யப்பட்டிருந்த சிலரை போர் முடிவடையும் தறுவாயில் விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரியவந்துள்ளது.

கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது. அப்படியெனில் அரச சாட்சிகளாக மாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்குக் கரிசனைபோலத் தெரிகிறது.

இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கின்றேன். நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசு கூறமுடியும்.

இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு முயற்சிப்பது தெரிகிறது. இவை என்னுடைய ஊகமே ஒழிய முழுமையான தரவுகள் எனக்கு இன்னமும் தரப்படவில்லை.

சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் யார் யார் என்னமாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்கு வரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டமா அதிபருக்கு சத்தியக்கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும்.

குறித்த தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும்போது தம்மிடமிருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விவரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றியமைக்கான காரணம் என நான் ஊகிக்கிறேன். உண்மை வெளிவந்தால் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்கமாட்டார் என்பது சட்டமா அதிபருக்குத் தெரியும்.

எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான மாற்றுதல் கைதிகளின் மனித, சட்ட உரிமைகளைப் பாதிக்கின்றன. சட்டத்துறைத் தலைமையதிபதி புறநிலை வைத்தே இவ்வாறான வழக்குகளை நோக்கவேண்டுமேயொழிய அகநிலையில் இருந்து நோக்குவது கண்டிக்கத்தக்கது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்