கும்ப்ளேவுக்கு 47வது பிறந்தநாள்!

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சுழல் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் மணிக்கட்டை சுழற்றி பந்துவீசுபவர். இவர், கர்நாடகா மாநிலத்துக்காக தனது 19 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு விரைவில் அவர் ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதே ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அறிமுகமானார். அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளிலும், 271 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கும்ப்ளே, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் போல் பெரிதளவுக்கு சுழற்றி பந்துவீசுபவர் அல்ல. இவர், பந்தின் வேகத்திலும், ஸ்டம்புகளுக்கு நேர் வீசுவதிலும், சரியான அளவில் பந்தை வீசுவதிலும் நம்பிக்கை கொண்டு விக்கெட் வீழ்த்துபவர்.

2007-ல் கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய பிறகு கேப்டன் பொறுப்பேற்ற கும்ப்ளே, இந்திய அணியை 14 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார்.

‘ஜம்போ’ பெயர் காரணம்:

இவரை செல்லமாக ஜம்போ என்று அழைப்பர். ஜம்போ ஜெட் என்ற விமானம் அதிவேகமாக செல்வதில் மிகவும் பிரபலமானது. 1990-ல் இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடி கொண்டாடிருந்தார். அப்போது தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவருடன் நவ்ஜோத் சிங் விளையாடினார். கும்ப்ளே பந்துவீசும் போது நவ்ஜோத் சிங் மிட்-ஆன் திசையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது கும்ப்ளே வீசிய பந்து சட்டென்று எகிறியது. அதனை கண்ட நவ்ஜோத் சிங் ‘ஜம்போ ஜெட்’ என்றார். அதில் ஜெட் என்ற வார்த்தை விலகி ஜம்போ மட்டும் தொடர்ந்து வந்தது. அதனால், அன்று முதல் இன்று வரை அவர் ஜம்போ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்:

1999, பாகிஸ்தான் கிரிக்கெட் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 2-வது டெஸ்ட் போட்டி தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 26.3 ஓவர்கள் பந்துவீசி 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதாவது பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

600 விக்கெட்:

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்:

இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை சுமார் ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.

கும்ப்ளே இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 29.65. ஒருநாள் கிரிக்கெட்டில் 271 போட்டிகலில் விளையாடி 337 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 30.90

இன்றைக்கு 47-வது பிறந்தநாளை கொண்டாடு கும்ப்ளேவுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள் அனில் கும்ப்ளே!!!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்