விரைந்து பரவுகிறது டெங்கு! வடக்கில் 7,000 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும்,  4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்  மாவட்ட சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் கீழ் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
டெங்குத் தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும். அவ்வாறு செல்லத் தாமதம் ஏற்பட்டதன் விளைவாகவே இந்த வருடம்  4 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்பு இனங்கள் கடந்த இரு மாதங்களாகச் சற்றுக் குறைவடைந்திருந்த போதும் இந்த மாதத்தில் மழை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 259 பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
வடக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவல் அதிகமாகவே காணப்படுகின்றது. கிளிநொச்சியில்  444 பேரும், மன்னாரில் 508 பேரும், வவுனியாவில் 761 பேரும், முல்லைத்தீவில் 296 பேரும் டெங்குத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாண சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதேவேளை, டெங்கு தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கென மேலதிகமாக ஆளணியினர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்