வீரப்பன் இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் விடை தெரியாத கேள்விகள்..! விலகாத மர்மங்கள்…!!

வீரப்பன் இறந்ததற்கு பிறகு இந்து பத்திரிக்கையில் அதைப்பற்றி தாமஸ் அவர்கள் எழுதிய இந்த வாசகத்தில் சொல்ல விரும்புகிறேன். ‘’வீரப்பனை தேடிச் சென்ற மனிதர்கள் விலங்குகளாக இருந்தார்.

ஆனால் காட்டில் ஒரு விலங்கு போல் வாழ்ந்த வீரப்பன் மனிதனாக இருந்தான் என்று குறிப்பிடுகிறார். அதே போல 1983ல் இருந்து 2004 வரை அந்த 21 ஆண்டுகளில் உலகம் முழுவதும் காடுகள் மிக வேகமாக சுருங்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அமேசான் காடுகள் 20 விழுக்காட்டிற்கு மேல் அழிக்கப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் சத்தியமங்கலம் காடுகள் மட்டும் 23 விழுக்காடு வளர்ந்தது. அதற்குக் காரணம் வீரப்பன் என்ற காவலன் அங்கே இருந்தான்’

18 அக்டோபர் 2004 இரவு 11 மணியளவில் பாப்பாரப்பட்டிக்கும், தருமபுரிக்கும் நடுவில் இருக்கும் பச்சினம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பன் அவர்களின் சாவு குறித்த காவல் துறையின் கதை, அவரை கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருவதாக ஏமாற்றி, காவல் துறை பிரத்யேகமாகத் தயாரித்த ஆம்புலன்ஸ் வேனில் ஒரு உளவாளியின் துணையோடு அவரை அழைத்து வந்தப் போது, தருமபுரிக்கு அருகில் உள்ள பாடி கிராமத்து அருகே அந்த வேன் மடக்கப்பட்டு, போலீஸ் வீரப்பனையும் அவருடன் இருந்தவர்களையும் சரண் அடையச் சொன்னதாகவும், அவர்கள் மறுத்துவிட்டு போலிஸை நோக்கிச் சுட முயன்ற காரணத்தால் அந்த வேனை நோக்கி போலிஸ் தொடர்ந்து சுட்டு, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் அவருடைய தோழர்கள் இருவரும் மாண்டார்கள் என்பதுத் தான்.

வீரப்பன் இறந்ததற்குக் காரணம் அவருடைய இடது கண்ணுக்கு மேலாக நெற்றியில் சுடப்பட்ட குண்டு தான். அந்த குண்டு அவர் மூளைக்குள் சென்று தலையின் பின்புறத்தில் வெளியே வந்திருந்தது. அவருடைய இடது கண் குண்டு உள்ளே சென்றதினால் உருவான வெற்றிடத்தால் மூளைக்குள் இழுக்கப்பட்டு தலையின் பின்புறத்தில் இருந்தது. இன்னொரு குண்டு அவர் உடலுக்குள்ளேயே தங்கி விட்டது. வீரப்பன் ஒரே ஒரு குண்டு பாய்ந்து இறந்தது என்பது காவல்துறை சொல்லிய கதைகளை பொய்யாக்குகின்ற ஒன்று.

வீரப்பன் ஒரு இராணுவ வீரர்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய போர் உத்திகளை தெரிந்தவர் என்பது உலகம் அறிந்தது. மிகப் பெரிய காவல்துறை படைகளால், வனத்துறை படைகளால் பிடிக்க முடியாதவராக அவர் விளங்கினார். அவர் பயன்படுத்திய தாக்குதல்கள் அனைத்துப் போர் உத்திகளையும் அறிந்திருந்தார் என்பதை நிரூபிப்பதாகத் தான் இருந்திருக்கிறது. அந்த அளவில் இருபக்கமும் காவல்துறையினர் சுட்டுக் கொண்டு இருக்கும் போது அவர் அந்த வாகனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

போர் உத்திகளை அறிந்தவர் என்ற முறையில் அவர் வேனின் தரையில் முழுவதுமாக கவிழ்ந்து படுத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் இருந்திருக்க முடியும். அப்படி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் பக்கவாட்டில் இருந்து இரண்டு புறமும் சுடப்படும் போது அந்த குண்டுகள் அவருடைய முகத்தின் மையப் பகுதியில் பாய்ந்து வெளிவருவதற்கான வாய்ப்பே கிடையாது. ஒரு குண்டு தலையின் அல்லது உடலின் ஒரு பகுதியில் நுழைந்து மறுபகுதியில் வர வேண்டுமானால், மிக அருகாமையிலிருந்து அதாவது ‘Point blank range’ல் இருந்து சுடப்பட்டிருக்க வேண்டும். வேனின் வெளிப்புறத்திலிருந்து, அதுவும் முப்பது மீட்டர் தொலைவில் இருந்து, சுடப்பட்ட குண்டு, வேனின் இரும்புப் பகுதிகளைத் துளைத்துச் சென்று, மண்டை ஓட்டின் உள்ளே சென்று வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை.

வீரப்பனை இரண்டு பேர் இருபுறமும் பிடித்துக்கொண்டு ஒரு காவலர் துப்பாக்கியை நெற்றிப் பொட்டியிலே வைத்து சுட்டிருக்க வேண்டும், அந்த குண்டு உள்ளே நுழைந்து வெளியே வந்திருக்க வேண்டும்.
அவருடன் இருந்த சேத்துக்குளி கோவிந்தன் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு இருந்தது. இது உருட்டுக்கட்டை போன்ற ஒன்றாலோ அல்லது அல்லது துப்பாக்கியின் பின் பக்கத்தினாலோ மிகக் கடுமையாக தாக்கப்பட்டதனால் ஏற்பட்டிருக்கலாம். காவலர்களுக்கும் வீரப்பன் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் அல்லது வீரப்பன் குழுவினர் தப்பிக்க முயன்ற போது காவல் துறை பயன் படுத்திய கடுமையான வன்முறையின் காரணமாக மட்டுமே சேத்துக்குளி கோவிந்தனின் உடலின் பல பாகங்களில் எலும்புகள் முறிந்திருக்க வேண்டும்.

18 அக்டோபர் 2004 இரவில் நடந்த உண்மைகளை எப்பொழுது அறியப்போகிறோம் என்று நான் காத்திருந்தேன். எப்பொழுதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட ஒருவர் அதிகாரத்தில் இருக்கிற போது மறைக்கப்படும். இதை வெளியே தெரிய வேண்டாம் என்று விரும்பியவர் இல்லாதபோது அது வெளியே வந்துவிடும். இந்த நம்பிக்கையோடு காத்திருந்த எனக்கு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வெளியிடப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய ‘’VEERAPPAN – CHASING THE BRIGAND’’ என்ற புத்தகம் விடை அளிக்கும் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பார்ப்போடு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே அமேசானில் தேடினேன். இல்லையென்றதும், வெளியிடப்பட்டவுடன் தேவை என முன்பதிவு செய்தேன். நூல் வெளியிடப்பட்டவுடன் அந்தப் புத்தகத்தை வாங்கி ‘கிண்டில்’ பயன்படுத்தி ஏறக்குறைய ஒரே நாளில் நேரத்தை ஒதுக்கி படித்து முடித்துவிட்டேன். அந்த புத்தகம் என்னுடைய சந்தேகத்திற்கு விடை கூறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, என் சந்தேகங்களை இன்னமும் உறுதியாக்கி இருக்கிறது.

அந்தப் புத்தகத்தைப் படித்தப் போது எனக்கு ஒரு விந்தையான மனநிலை தோன்றியது. இந்தப் புத்தகத்தை விஜயகுமார் எழுதுகிற போது தன் வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையைப் பற்றிய வரலாற்றை எழுதுகிறோம் என்ற மகிழ்வோடு எழுதுவதை காண முடிகிறது. இந்தப் புத்தகம் ஏறக்குறைய தன்னுடைய சுய சரிதை என்ற மகிழ்வோடு அவர் எழுதியிருக்கிறார். 14 ஜீலை 1976 ஆண்டு பெரிய கண்களுடைய அந்த அழகான பெண்ணை அவர் பெண் பார்க்க சென்றார் என்பதைப் பற்றியும், பெண் பார்க்க சென்ற போது நெய் சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்பட்டது என்பதையும் எழுதியிருப்பதில் இருந்து அவர் தன்னைப் பற்றிய நேரடி அறிமுகமும், அன்பும் இதைப் படிப்பவர்களுக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தோடு எழுதியிருப்பதை உணர முடிகிறது.

ஆனால் இந்தப் புக்கத்தை முழுவதும் படித்தப் பின்னர் விஜயகுமார் ஐபிஎஸ்சை பற்றி அறிந்துக் கொண்டதை விட வீரப்பன் அவர்களைப் பற்றி நாம் உணர்ந்து கொள்வது தான் மிக அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் விஜயகுமார் ஐபிஎஸ் ஒரு மாவீரன் அல்லது ஒரு கதாநாயகன் என்ற எண்ணத்தைவிட வீரப்பன் ஒரு மாவீரன், ஒரு கதாநாயகன் என்ற எண்ணத்தையே அந்தப் புத்தகம் ஏற்படுத்தியது.

விஜயகுமார் எடுத்துக் கொண்ட பயிற்சிகளிலேயே கடுமையான பயிற்சி, ரோஸே என்ற, ஜெனரல் கடாஃபியின் மெய்காவலர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஒருவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டது தான். ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைகளின் மேல் எடுத்துக் கொண்ட அந்த பயிற்சியும் கூட வீரப்பனை காட்டில் நெருங்கப் பயன் படவில்லை என்பதை என்னும் போது, இலட்சக் கணக்கில் செலவு செய்து ஸ்விட்சர்லாந்தில் பயிற்சி எடுப்பதற்குப் பதிலாக இவர் வீரப்பனிடமே பயிற்சி எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

வீரப்பனுடைய சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த அந்தக் காட்டுப்பகுதி மக்களின் மனதில் எப்படியிருந்தார் என்பதற்கு அவருடைய நூல்களிலே வருகிற விஷயங்களே சான்று. அந்தக் காட்டு சிங்கத்தை கடைசி வரை இவர்கள் கூண்டிலே அடைக்க முடியாததற்கு ஒரே காரணம் அந்தக் காட்டிலே இருக்கிற 400 கிராமங்களிலும் வீரப்பன் அவர்களை தெய்வமாகவும், காவல் துறை மற்றும், காட்டிலாக அதிகாரிகளை எதிரிகளாகவும் பார்த்தார்கள் என்பதும் தான். இராவணன் கதையிலே வீரையாவின் தங்கையை ஒரு காட்டு இலாக்கா அதிகாரி கற்பழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த தற்கொலைக்கு வீரப்பன் பழிவாங்குவதாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதே போல வீரப்பனின் தங்கை காட்டு இலாக்கா அதிகாரிகளின் பேச்சை நம்பி ஒரு கிராமத்தில் சுகாதார செவிலியராக பணிப்புரிகிறார். மிக மகிழ்ச்சியோடு அந்த கிராமம் முழுவதற்கும் மருத்துவப் பணியாற்றி வருகிறார். ஒரு மர்மமான சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்துக்கொள்கிறார். அதுவும் காட்டு இலாக்கா அதிகாரி வீட்டிற்கு சென்று சந்தித்துவிட்டு வந்த பிறகு.

அதே போல இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. அந்தக் காடுகளில் மன்னாக மட்டுமே வீரப்பன் இருந்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் அவருடைய கோட்டைக்குள் இவர்கள் நுழையவும் முடியவில்லை, நுழைந்து அந்த சிங்கத்தின் அருகிலே செல்லமுடியவில்லை. அந்த சிங்கத்தின் இரண்டு கண்களும் முழுவதும் பழுதுபட்ட நிலையில் இனி அந்த சிங்கம் அந்தக் காட்டிலே வாழமுடியாது என்ற நிலையில், சிங்கம் மருத்துவ உதவி கோரிய போது அந்த உதவியைத் தருகிறேன் என்று சொன்ன, வழக்கம் போல காசுக்கு ஆசைப்படுகிற சில பேரால் அவர் வெளியே கொண்டுவரப்பட்ட பின்னர் தான் அவரை அவர்கள் பிடிக்க முடிந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் நிறைய பொய்களை எழுதியிருக்கிறார் விஜயகுமார் என்பதற்கு இன்னொரு அசைக்க முடியாத ஆதாரம் வீரப்பனுடைய இரண்டாவது பெண் குழந்தை காட்டிலே வீரப்பன் குழுவோடு இருந்ததாகவும், இரவு நேரத்தில் அந்த குழந்தை அழுத காரணத்தினால், அந்த குழந்தையின் அழுகை சத்தம் தன்னை தேடிவரும் காவல்துறையினருக்கும், காட்டு இலாக்கா அதிகாரிகளுக்கும் காட்டிவிடும் என்று வீரப்பன் அச்சப்பட்டதாகவும், அதனால் அந்த இரண்டாவது பெண்ணை வீரப்பனே கொலை செய்துவிட்டதாகவும் ஒரு கதையை எழுதியிருக்கிறார். எழுதிவிட்டு, இவரே புத்தகத்தின் பின் பகுதியில் அந்த இரண்டாவது பெண் நன்றாக இருப்பதாக குறிப்பிட்டுயிருக்கிறார். உண்மை என்னவென்றால் வீரப்பனுடைய இரண்டு பெண்களும் உயிரோடு இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள். வீரப்பன் தன்னுடன் இருந்த யாரையும், குறிப்பாக பெண்களையோ, குழந்தைகளையோ கொலை செய்ததாக வரலாறே கிடையாது. வீரப்பனால் இரண்டு பேர் தண்டிக்கப்பட்டார்கள். ஒருவன் கிராமத்திற்கு சென்று ஒரு பெண்ணை கற்பழித்த காரணத்திற்காக கடுமையாக தண்டிக்கப்பட்டான் என்பது தான் உண்மை.

வீரப்பன் இறந்ததற்கு பிறகு இந்து பத்திரிக்கையில் அதைப்பற்றி தாமஸ் அவர்கள் எழுதிய இந்த வாசகத்தில் சொல்ல விரும்புகிறேன். ‘’வீரப்பனை தேடிச் சென்ற மனிதர்கள் விலங்குகளாக இருந்தார். ஆனால் காட்டில் ஒரு விலங்கு போல் வாழ்ந்த வீரப்பன் மனிதனாக இருந்தான் என்று குறிப்பிடுகிறார். அதே போல 1983ல் இருந்து 2004 வரை அந்த 21 ஆண்டுகளில் உலகம் முழுவதும் காடுகள் மிக வேகமாக சுருங்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அமேசான் காடுகள் 20 விழுக்காட்டிற்கு மேல் அழிக்கப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் சத்தியமங்கலம் காடுகள் மட்டும் 23 விழுக்காடு வளர்ந்தது. அதற்குக் காரணம் வீரப்பன் என்ற காவலன் அங்கே இருந்தான்’’
வீரப்பனுக்கு பயந்து காட்டு இலாக்கா அதிகாரிகளும், காவல்துறையினரும் உள்ளே செல்லவில்லை.

இன்றைக்கு உறுதியாக சொல்கிறேன் வீரப்பன் இறந்து 13 ஆண்டுகள் கழித்து, அந்தக் காடு இருந்த காலக்கட்டத்தைவிட இன்னும் குறைந்து இருக்குமே தவிர அதிகரித்து இருக்க வாய்ப்பே இல்லை. அது தான் அவருக்கும், அவரை தேடிச் சென்ற விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம். அதே போல தாமஸ் அவர்கள் இன்னொன்றை குறிப்பிடுகிறார். வீரப்பன் பெண்களின் மானத்தை காக்கிற காவலாக பார்க்கப்பட்டார். அவரை தேடிச் சென்ற காவல்துறையினர் தொடர்ந்து பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிற விலங்குகளாக இருந்தார்கள் என்பது தான் அது. இதை நிரூபிக்கிற மாதிரி இரண்டு விஷயங்களை சொல்லலாம்.

வீரப்பனை சுட்டுக்கொல்வதற்கு முன்பு அவரை கொண்டு வந்த காவல்துறையினரால் பொய்யான தயாரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வேனை ஓட்டிவந்த காவலர், வீரப்பன் இறந்ததற்குப் பிறகு, நேரடியாக உதவி ஆய்வாளராக பணி உயர்த்தப்பட்டார். பணி உயர்த்தப்பட்ட நிலையில் அவர் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டார் என்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி மீண்டும் பணியில் இருந்து பணியிறக்கம் செய்யப்பட்டார்.

வீரப்பன் இருந்தவரை ஒரு பாலியல் தொந்தரவு கூட பெண்களுக்கு ஏற்படாது என்ற நிலை இருந்தது. வீரப்பன் இறந்தப்பிறகு அந்தக் காட்டுப்பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு இலாக்கா அதிகாரிகள் வருகிறார்கள், அங்கிருக்கிற ஆண்களை துன்புறுத்துகிறார்கள், பெண்களை பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்ற பெரிய புகார் எழுந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பார்த்திபன் அந்த கிராமப் பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு கிராமத்திலும் நடு கிராமத்தில் ஒரு பெரிய மணியை வைத்து, யாராவது காட்டு இலாக்கா அதிகாரிகள் இரவிலே வந்தால் இந்த மணியை உரக்க அடிக்க வேண்டும், அதை கேட்டு இரவு நேரமாக இருந்தாலும் ஒலி நீண்ட தூரத்திற்கு கேட்கும் என்பதினால் பக்கத்து கிராமத்தில் இருக்கிற எல்லா கிராமத்து மக்களும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்டு இலாக்கா அதிகாரிகளை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு முறையை அறிமுகப்படுத்தினார். இது ஒன்றே போதும் ஏன் அந்தப் பகுதி மக்கள் காட்டு இலாக்கா அதிகாரிகளை வில்லன்களாகவும், வீரப்பனை தெய்வாமாகவும் பார்த்தார்கள் என்பதற்கு.

18 அக்டோபர் 2004 நள்ளிரவில் தன் மனைவி மீனாவிற்கு தொலைபேசியில் பேசி, இந்த நல்ல செய்தியை சொல்ல முயன்றதாகவும், ஆனால் அவருடைய கைபேசி அணைத்து வைக்கப்பட்டதனால் சொல்ல முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் சொல்வதற்குள்ளாகவே பிபிசி, சிஎன்என் மற்றும் இந்திய தொலைக்காட்சிகளிலே செய்தி வந்து அந்த வியப்பை உண்டாக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார். நான் எதிர்பார்த்தது வேறு. மீனாவுடன் மட்டுமல்ல, இன்றைக்கு உயிரோடு இல்லாத ‘’அந்த’’ பெண்மணிக்கு அவர் கைபேசியில் பேசியதையும், அந்தப் பெண்மணி சொன்னபிறகு தான் சுட்டார் என்பதையும் இங்கே அவர் பதிவு செய்திருந்தால் இது ஒரு உண்மையான பதிவாக இருந்திருக்கும்.

விஜயகுமாருக்கு ஜெயலலிதாவின் பால் தனிப்பட்ட மரியாதையும் ஒரு அன்பும் இருப்பதை உணர முடிகிறது. 2001ம் ஆண்டு ஜூலை மாததில் ஒரு நாள் காலை 11 மணியளவில் ‘அம்மா’ தன்னை அழைத்ததாகவும், வீரப்பனைத் தேடும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டியதாகவும் கூறியிருக்கும் அவர் பலமுறை ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டிருக்கிறார். விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் புத்தகத்தைப் பற்றி எனக்கு அவா எழுதுவதற்கு இன்னொரு காரணம் சில நாட்களுக்கு முன்பு தான் இரா. வரதராஜன் என்பவர் எழுதிய தக்கர் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன்.

இந்த நூலைப் படிப்பவர்களுக்கு தக்கர்கள் என்ற ஈவு இரக்கமற்ற கொலைக்காரர்கள் எப்படி அரசை ஏமாற்றி, அப்பாவி மக்களை ஏமாற்றி கொலைத் தொழிலையும், கொள்ளைத் தொழிலையும் எந்தவித குற்ற உணர்வுமில்லாமல், ஏதோ நிலத்தை உழுது வேளாண்மை செய்து போன்ற சாதாரண விஷயமாக செய்தார்கள் என்பதை அச்சத்தோடு படிப்போம். இந்த நூலுக்காக இரா. வரதராஜன் அவர்கள் எண்ணற்ற ஆதாரங்களை திரட்டி உண்மையை தவிர வேறேதுவும் இருந்துவிட கூடாது என்ற கவனத்தோடு எழுதியிருப்பார். ஏறக்குறைய இது ஒரு ஆவணம்.

வீரப்பனைப் பற்றி ‘’ஆபரேசன் கூக்கூம்’’ என்ற வீரப்பனை இறுதியாக பிடிப்பதற்கான செயல் திட்டத்தை அறிந்துக்கொள்ள வேண்டும், பல உண்மைகளை அறிய வேண்டும் என்ற ஆவலோடு படித்தேன். ஆனால் இந்த நூல், உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எழுதப்பட்ட நூலாக தெரியவில்லை. மாறாக, பொய்களை பதிவு செய்து பொய்களை உண்மையாக காட்டுவதற்காக எழுதப்பட்ட நூல் போல் போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்னால் முன்னெப்போதையும் விடவும் வீரப்பனைப் பற்றிய வியப்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது. என் காதுகளில் புஷ்பவனம் குப்புசாமியின் குரலில்
வேலாயி வீராயி
வீரப்பன் கதைய கேட்டதுண்டா
அவன் வீரக்கதைய கேட்டதுண்டா
உனக்கொரு மகன் பிறப்பான்
அவன் கதைய சொல்லி வைய்யி
புலியாக மாறிடுவான்
இந்த பூலோகத்த ஆண்டிடுவான்
என்ற வரிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்