சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வுப் பேரணி..!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி ஒன்று, யாழ் நகரில் நேற்று இடம்பெற்றது.நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடை பயணம் இடம்பெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி இந்த நடைபயணத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நடைபயணம் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, கே.கே. எஸ்.வீதி, ஆஸ்பத்திரி வீதி, வேம்படிச் சந்தி வழியாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. சத்தியமூர்த்தி யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதியும், சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்தியகலாநிதி எஸ். ரவிராஜ், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமாரன், வைத்திய நிபுணர் எஸ். சிவன்சுதன், வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகம் சுரக்கும் தொகுதி வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன், மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பலரும், அணிதிரண்டு கலந்து கொண்டனர்.

குறித்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற, விழிப்புணர்வுப் பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, அங்கு நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு விசேட உரைகளும், நீரிழிவு தினத்தை முன்னிட்டுப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, சித்திரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்