அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில்-1 கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் செவ்வாய்கிழமை(14-11-2017) காலை  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பொலிசாருக்கு இன்று காலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் அடங்கிய பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலம் காணப்பட்ட இடத்தினை அடையாளப்படுத்தியதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்று கடல் அலையில் சிக்குண்டு காணாமல் போன இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாய்ந்தமருது பிரதான வீதி 17ஆம் பிரிவைச் சேர்ந்த சஹாப்தீன் அப்ரீன் என்ற 17 வயதுடைய மாணவன்  என உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை மாலை வேளையில் சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்த கடலில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கடலில் நீராடிக் கொண்டு இருந்த வேளை  கடல் அலையில் சிக்குண்டு தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களினால் மூவர் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் கல்முனை  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்