உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது குரோஷியா; சராசரி கோல்கள் விகிதப்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி

கிரீஸ் அணிக்கு எதிரான 2-வது கட்ட ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த குரோஷிய அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. பிளே ஆஃப் சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால் சராசரி கோல்கள் விகிதப்படி குரோஷியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரீஸ் நாட்டின் பிரேயஸ் நகரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் 2-வது கட்ட ஆட்டத்தில் குரோஷியா – கிரீஸ் அணிகள் மோதின.

முதல் 30 நிமிடங்கள் கிரீஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் சோக்ராடிஸ், அனஸ்டாசியோஸ் ஆகியோர் இலக்கை நோக்கி துல்லியமாக பந்துகளை உதைத்தனர். ஆனால் அவற்றுக்கு பலன் கிடைக்கவில்லை. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கோல் அடித்து குரோஷிய அணிக்கு நெருக்கடி கொடுக்க கிரீஸ் வீரர்கள் தவறினர். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கிரீஸ் அணியின் கோல் அடிக்கும் அற்புதமான முயற்சி தகர்க்கப்ட்டது.

கோஸ்டாசிடம் இருந்து கிராஸை பெற்ற நடுகள வீரரான செகா, கோல் கம்பத்தின் அருகே வைத்து தலையால் முட்டி கோல் வளைக்குள் செலுத்த முயன்றார். ஆனால் குரோஷிய கோல்கீப்பர் டேனிஜெல் சுபாசிக் அதை தட்டிவிட அருகில் நின்ற ரெட்சோஸ் தலையால் முட்டி, கிரீஸ் அணியின் கோல் அடிக்கும் கனவை கலைத்தார். 43-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் இவான் பெரிசிக் இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்த பந்து கோல்கம்பத்தின் பக்கவாட்டில் பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

அடுத்த சில நொடிகளில் அந்த அணியின் நட்சத்திர வீரரான இவான் ராகிடிக், ப்ரீஹிக்கில் பந்தை கர்லிங் செய்தார். ஆனால் பந்து கோல்கம்பத்தின் மேலாக சென்று மீண்டும் ஏமாற்றம் கொடுத்தது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதி ஆட்டத்திலும் கிரீஸ் வீரர்கள் பந்தை வெகுநேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெனால்டி ஏரியாவில் இருந்து மிட்ரோக்லூ அடித்த பந்து கோல் கம்பத்தின் அருகே விலகிச் சென்றது.

இது கிரீஸ் அணி கோல் அடிக்க கிடைத்த மிக நெருக்கமான வாய்ப்பாக அமைந்தது. 79-வது நிமிடத்தில் கிரீஸ் அணி கோல் அடித்தது. ஆனால் இது ஆஃப் சைடு கோல் என அறிவிக்கப்பட்டது. ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் வசிலிஸ் அடித்த வலுவான ஷாட் ஒன்றை கோல்கீப்பர் சுபாசிக் தடுத்து நிறுத்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

சாக்ரெப் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் சராசரி கோல்கள் விகிதப்படி குரோஷியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா 5-வது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் விளையாட தகுதி பெற்றது.

சுவிட்சர்லாந்து

பாசல் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து – வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. எனினும் முதல் பிளே ஆஃப் சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்ததால் அந்த அணி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது. இதுவரை ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 28 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடைசி 4 இடங்களை பிடிப்பதற்கான ஆட்டங்களில் சுவீடன் – இத்தாலி, டென்மார்க் – அயர்லாந்து, பெரு – நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா – ஹோண்டுராஸ் அணிகள் மோதுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்