தண்ணீரில் அமுக்கி 4 வயது குழந்தை கொலை!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன்(வயது 32). வக்கீல்.

இவருடைய மனைவி ஜெயந்தி(30).  இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 4 வயதில் கோசிகா என்ற மகள் இருந்தாள். இவள், கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்  –மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயந்தி தனது மகளுடன் குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தன்னுடன் மகள் இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார். குழந்தையை வைத்தாவது இருவரும் ஒன்று சேரட்டும் என்ற எண்ணத்தில் ஜெயந்தியின் பெற்றோரும் வாரம் தோறும் கோசிகாவை சரவணன் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

இதற்கிடையில் வக்கீல் சரவணனிடம், விவாகரத்து சம்பந்தமாக அரக்கோணத்தை சேர்ந்த ஆஷா (29) என்பவர் வந்தார். கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வக்கீல் சரவணனை அடிக்கடி வந்து சந்தித்து சென்றார்.

இதனால் அவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. விவாகரத்து வழக்கு தொடர்பாக அடிக்கடி அரக்கோணம் சென்று விட்டு வரவேண்டும் என்பதால், தன்னுடன் தங்கும்படியும், மனைவியை பிரிந்து வாழும் தான், உன்னையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதால் ஆஷா தனது மகனுடன் சரவணனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

தற்போது ஆஷா கர்ப்பமாக உள்ளார். வெளி ஆட்களிடம் ஆஷாவை தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் என்று கூறி உள்ளார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் மகள் கோசிகாவை பள்ளியில் இருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

திடீரென நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள தண்ணீர் வாளியில் கோசிகா தவறி விழுந்து விட்டதாக சரவணனுக்கு போன் மூலம் ஆஷா தகவல் தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை கோசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஜெயந்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி மற்றும் அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று கோசிகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது மகளின் முகத்தில் காயங்கள் இருப்பதை கண்ட ஜெயந்தி, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளை தனது கணவர் சரவணன், அவருடைய தந்தை மோகன் மற்றும் வீட்டு வேலைக்கார பெண் ஆஷா ஆகியோர் சேர்ந்து கொலை செய்து உள்ளனர் என்றும் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் குழந்தை தவறி விழுந்ததாக கூறிய தண்ணீர் வாளியை பார்த்தனர்.

அது சிறிய அளவில் இருந்தது. அதன் உள்ளே குழந்தை தவறி விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதிய போலீசார், குழந்தையின் தலையை பிடித்து தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொலை செய்து இருப்பதை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சரவணனின் கள்ளக்காதலியான ஆஷா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து துருவி, துருவி நடத்திய விசாரணையில், கோசிகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ஆஷா அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:–

எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து வாங்குவதற்காக சரவணனிடம் வந்தேன். அவருடைய பேச்சு எனக்கு பிடித்ததால் நெருங்கி பழகினேன். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் எனது மகனுடன் அவரது வீட்டில் ஒன்றாக தங்கினேன். இதில் நான் கர்ப்பம் ஆனேன்.

சரவணனின் தாய் இறந்து விட்டதால் வீட்டில் உள்ள அவரது நகைகளை எல்லாம் எனக்கு போட்டு அழகு பார்ப்பார். இதனால் அவருடைய சொத்துகள் அனைத்துக்கும் வயிற்றில் வளரும் எனது குழந்தையே வாரிசு என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் சரவணன் தனது மகள் கோசிகாவை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவதால் அவர் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து விடுவாரோ என்று கருதினேன்.

மேலும் சரவணன், அவருடைய தந்தை மோகன் இருவரும் இந்த சொத்துகள் முழுவதும் கோசிகாவுக்குத்தான் சேரும் என்று கூறி வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், கோசிகாவால் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொத்து கிடைக்காமல் போய்விடுமோ? என்று கருதி, சொத்துக்கு இடையூறாக உள்ள கோசிகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

நேற்று முன்தினம் சரவணனின் தாயாருக்கு நினைவு தினம். அதற்கு தேவையான பொருட்கள் வாங்க மோகன் கடைக்கு சென்று விட்டார். காலையிலேயே சரவணனும் வேலை வி‌ஷயமாக வெளியே சென்று விட்டார். எனது மகனை, என் தம்பியுடன் வெளியே அனுப்பி வைத்தேன்.

வீட்டில் கோசிகா மட்டும் தனியாக இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். கோசிகாவின் தலை முடியை பிடித்து தரதரவென்று   இழுத்துச்சென்று  அங்கிருந்த தண்ணீர் வாளியில் அவளது முகத்தை அமுக்கினேன். இதில் கோசிகா, தண்ணீரில் மூச்சுத்திணறி அதே இடத்தில் இறந்து விட்டாள்.

இதையடுத்து எதுவும் தெரியாதது போல் சமையல் அறைக்கு சென்று விட்டேன். கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த சரவணனின் தந்தை மோகன், பேத்தி கோசிகாவை எங்கே? என்று கேட்டார். நான் எனக்கு தெரியாது என்று கூறி விட்டேன்.

பின்னர் அவர், உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் வாளியில் கோசிகா முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

பின்னர் அவளை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்,

என் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தேன். ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ஆஷாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையின் தந்தையான வக்கீல் சரவணனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் சரணவனின் தந்தை மோகனும் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளார். எனவே அவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயந்தியின் பெற்றோர் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

பாட்டி இறந்த நாளிலேயே பேத்தியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்