மும்பைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கமாண்டோவுக்குச் சிலை எழுப்பிய மனைவி!

மும்பைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கமாண்டோவுக்குச் சிலை எழுப்பிய மனைவி!

2008, செப்டம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை, அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அரபிக் கடலோரத்தில் தாஜ் ஹோட்டல் பற்றி எரிய, தீவிரவாதிகள் பிடியில் சிக்கியது நரிமன் ஹவுஸ். மும்பையில் காலம்காலமாக யூதர்கள் வழிபாடு நடத்தும் இடம்தான் இந்த `நரிமன் ஹவுஸ்’. யூதர்கள்மீது கொண்டுள்ள கோபத்தால், நரிமன் ஹவுஸும் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தது. உள்ளே இருந்தவர்களைப் பிணைக்கைதிகளாக்கினர் தீவிரவாதிகள். அவர்கள்மீது, தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். தீவிரவாதிகளும் பெருங்கோபத்துடன் பதிலுக்குத் தாக்கினர்.

பிணைக்கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டோக்களில் ஒருவரான கஜேந்திர சிங் பித்ஷின் உடலை, கிரானைட்கள் பிய்த்தெடுத்தன. சடலமாகக் கீழே விழுந்த பிறகே, அவரின் கையில் இருந்த ஏ.கே-47 ரகத் துப்பாக்கி தன் இயக்கத்தை நிறுத்தியது.

மும்பைத் தாக்குதலில் வீரமரணமடைந்தவருக்குச் சிலை

கஜேந்திர சிங் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பம் டேராடூன் நகருக்குக் குடிபெயர்ந்தது. அவர் உயிர்த் தியாகத்தை மதித்து உயரிய `அசோக் சக்ரா ‘ விருது வழங்கப்பட்டது. அவர் குடும்பத்துக்கு மத்திய அரசு பெட்ரோல் பம்ப் ஒதுக்கித் தந்தது. இந்தப் பெட்ரோல் பம்ப்தான் ப்ரீத்தியின் குடும்பத்துக்கு இப்போது வாழ்வாதாரம். பித்ஷ் மரணமடைந்தபோது, அவரின் மகள் ப்ரீத்திக்கு 9 வயது. தற்போது ப்ரீத்தி வளர்ந்துவிட்டார்.

“கமாண்டோ பணியில் இருந்ததால், தந்தை உயிருடன் இருந்தபோது அவருடன் எங்களால் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை. தந்தையை ரொம்பவே மிஸ் செய்தோம். தீவிரவாதிகள் சண்டையிட்டு அவர் இறந்த தினத்தில், மானசரில் இருந்த எங்கள் வீட்டைச் சுற்றி ஏராளமானோர் திரண்டிருந்தனர். `அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை… அவரைப் பார்க்கப் போகிறோம்’ என்று மட்டும்தான் என்னிடம் சொன்னார்கள். எங்களால் தந்தையின் உயிரற்றச் சடலத்தைத்தான் பார்க்க முடிந்தது. உயிரற்ற அவரின் உடலைப் பார்த்தபோதுகூட அப்பா உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தந்தையின் உடல் சிதைந்திருந்தது. என் மனம் அந்த வலியை உணர்ந்தது. அந்தத் தருணத்தில் `நானும் ராணுவத்தில் சேர வேண்டும்’ என என் உள்மனம் சொன்னது. இப்போது வயதை எட்டிவிட்டேன். என் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவைசெய்ய விரும்புகிறேன்” என்றார்.

மகன் கெளரவுக்கு 20 வயதாகிறது. பட்டம் பெற்றுள்ள அவர், பெட்ரோல் பம்பில் தாய்க்கு உதவியாக இருக்கிறார்.“என் கணவரின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளித்து, எங்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து தந்துள்ளது. பணத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்னிடம் உள்ள அவ்வளவு பணத்தையும் யாராவது எடுத்துக்கொண்டு, என் கணவரைத் திருப்பித் தர மாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது” என்று கண் கலங்குகிறார் வினிதா.

மும்பைத் தாக்குதலில் வீர மரணமடைந்தவருக்குச் சிலை

டேராடூன் அருகே உள்ள கணேஷ்பூர் என்ற ஊர்தான் பித்ஷுக்குச் சொந்த ஊர். கணவர் இறந்த பிறகு, சொந்தக் கிராமத்தில் கணவருக்கு நினைவகம் ஒன்றை வினிதா கட்டியுள்ளார். இங்கு கமாண்டோ உடையில் கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் பித்ஷ் சிலையாக நிற்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்