குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதா ???

(க.கிஷாந்தன்)

ஊவா பரணகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஹாட்டப்பிட்டிய தோட்டம் உமாஓயா பல்நோக்கு திட்டத்திலிருந்து சுமார் இரண்டு அரை கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கஹாட்டப்பிட்டிய தோட்டத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில் இவர்களுக்கு பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இக் கிராம மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்கென ஒரே ஒரு கிணறு மாத்திரமே காணப்படுகின்றது. இருந்தும் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இப்பகுதியில் உருவாக்கப்பட்டதன் பின்பு குறித்த தோட்டத்தில் உள்ள குடிநீர் பெறும் கிணற்றில் நீர் வற்றி உள்ளது.

இதனால் இத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகளவு பணங்களை செலவு செய்து குடிநீரை வெளி இடங்களிலிருந்து பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கென தண்ணீர் இல்லாத நிலைமை உமாஓயா திட்டத்தின் ஊடாக எமது தோட்டத்தில் ஏற்பட்டுள்ளது என குற்றம் சுமத்துகின்றனர்.

தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூட பணம் செலுத்தியே தண்ணீர் பெற்று அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக பெரிதும் கவலை அடைகின்றனர்.

ஊவா பரணகம பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கஹாட்டப்பிட்டிய தோட்ட மக்கள் குடிநீர் பிரச்சினைக்காக 20 வருட காலமாக போராடி வருகின்றனர்.

இப்பகுதி அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயம் தொடர்பில் முறையிட்டுள்ள போதிலும் 20 வருடங்காள உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாமல் தொடர்ந்தும் இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கஹாட்டபிட்டிய தோட்ட மக்கள் 200 குடும்பங்களை சார்ந்தவர்கள் இக்கும்பத்தார்கள் ஒரே ஒரு கிணற்று நீரை நம்பியே இதுவரை காலமும் வாழ்ந்து வருகின்றனர்.

இரவு பகல் என குடிநீரை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் சம்பவங்களும் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றது. குடிநீரை இரவு நேரங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க ஊவா பரணகம பிரதேச செயலகம் எத்தகைய முயற்சியினை மேற்கொண்டுள்ளது என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என இம்மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்