ஏழ்மையை காரணம் காட்டி படிக்க முடியவில்லை என்பது சமுதாய குற்றமாகும்..!!!

இன்றய சிறந்த மாணவர்கள் நாளைய நற்பிரஜைகள், நாம் அனைவருக்கும் கல்வி என்னும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் நாம் கல்வியின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம்.

மொட்டுக்கள் மலர்ந்து விரியும் பொழுது மணம் பரப்பும், அதே போலவே மாணவர்களும் சிறந்த கல்வியை பெற்று திகழும்பொழுது அச்சிறப்பு நாட்டையே மேன்மையுறச் செய்யும். மாணவர்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தவும், பாடசாலையின் அவசியத்தினை எடுத்துக்கூறவும் சர்வதேச மாணவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் நவம்பர் 17இல் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. இன்று சர்வதேச மாணவர் தினமாகும். எமது தமிழ் பிரதேசங்களிலும் மாணவர்கள் கல்வியில் ஈடுபடுவதனை அதிகரிக்க அனைவரும் ஒன்றாகுவோம். சுரவணையூற்று பாடசாலைச் சிறார்களை சந்தித்தபோது

 

முன் எப்போதுமே இல்லாத அளவுக்கு இப்போது கல்விக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் பிள்ளைகளை உயர் கல்வியின் உச்சத்துக்கே கொண்டு போகத் துடிக்கிறார்கள். எந்த விலையைக் கொடுத்தேனும் அதைப் பெற்றுவிட ஆலாய்ப் பறக்கிறார்கள்.

சூதாட்டத்தில் பந்தயக் குதிரையின் பேரில் பணம் கட்டுவது போல எந்தக் கல்விக்கு இப்போது மதிப்பு என அறிந்து அதனைப் பெற எப்படிப்பட்ட குறுக்குவழியையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. தங்கள் பிள்ளை ‘டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும், பணம் பண்ண வேண்டும்’ என்பதே பெற்றவர்களின் கனவாக இருக்கிறது. இதற்காக அவர்கள் எதையும் கொடுக்கத் தயார்.

இல்லாமையும் கல்லாமையும்

இலங்கையில் இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தையாக கன்னங்கரா இருந்து தமது ஆட்சிக்காலத்தில் ‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற நிலையை உருவாக்கினார். ஏழை எளிய கிராம மக்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய இரண்டு கண்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. இன்று அரசியல் சமுதாய, ஆட்சித் துறைகளில் இவரின்; பெயரைச் சொல்வோரே இப்போதும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

என்றான் பாரதி. கல்வியளிப்பதே மாபெரும் அறமாகக் கருதப்பட்டது. கல்லாமையும், இல்லாமையும் நீடிப்பது பாவமாகவும், பழியாகவும் பேசப்பட்டது.

இன்று சமுதாயக் குற்றமாகப் பார்க்கப்படுவது.

‘ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்’

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். எனவே, ஏழ்மையைக் காரணம் காட்டிப் படிக்க முடியவில்லையென்பது சமுதாயக் குற்றமாகும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’

பிச்சை எடுத்தாகிலும் படிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து, பொருள் கொடுத்தாகிலும் படிக்க வேண்டும் என்ற நிலைமைக்குச் சமுதாயம் மாறிவிட்டது.

வணிகமயமாகும் கல்வி

எதை எடுத்தாலும் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சுகாதாரம் மற்றும் கல்வி என்பவை முழுமுதல் வணிகமாகிவிட்டது. பாலர்வகுப்பில்; தொடங்கி உயர்கல்வி வரை அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகிவிட்டது. பல தனியார் கல்வி மையங்கள் உருவாகி உள்ளன. அதனை அரசாங்கமும் அங்கிகரித்துள்ளது.

இந்தக் காரணத்தினால்; இன்றையக் கல்வி ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. என்றாலும் இதனை எட்டிப் பறிக்காமல் விடப்போவதில்லை என்ற சூளுரையுடன் எல்லாரும் போட்டியிடுகின்றனர். போட்டிமயமான இந்த உலகத்தில் கல்வியும் ஒரு பந்தயப் பொருளாகிவிட்டது.

சமுத்துவமான கல்வி வாய்ப்பு எங்கே?

 ‘மக்களாட்சியில் மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே வாய்ப்பு, மிகவும் பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து…’ என்றார் மகாத்மா காந்தி.

ஆனால் வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளவரிடையேதான் இன்று நல்ல கல்வி போய்ச் சேருகின்றது. நகர்ப்புறப் பாடசாலைகள்தான் பல செல்வாக்குப்படைத்தவர்களினால் வசதிகளுடனும் , தரமான ஆசிரியர்களுடனும் விளங்க கிராமப்புற பாடசாலைகளில் அவை வெறும் பகற்கனவாகவே இருந்துவருகின்றது. இதனால் சமனான வாய்ப்பு கிடைப்பதில் கேள்வி நிலவுகின்றது.

பெற்றோரும், பிள்ளைகளும்.

இந்த வேறுபாடுதான் இப்போது கல்வித் துறையையும் பிடித்து ஆட்டுகிறது. பெற்றவர்களை வறுமையிலே மிதக்க விட்டுவிட்டு, பிள்ளைகளுக்குக் கல்வியைக் கட்டாயமாக்குவது வேடிக்கையான வேதனை. பெற்றோர்களுக்கு வாழ்க்கை மறுக்கப்படுகிறது; பிள்ளைகளுக்குக் கல்வியும் மறுக்கப் படுகிறது. இதுதான் உண்மை.

அரசாங்கத்துக்கு ஏதும் கடமைகள் இல்லையா? மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு இவற்றை அளிப்பது யார்? இவை இன்று தனியாரின் ஏகபோக வணிகமாக மாறுவதற்குக் காரணம் என்ன? இந்தச் சமுதாய அமைப்பு இப்படியே இருக்க வேண்டும் என்பதுதானே?

மத்திய,மாகாண அரசுகளே கல்வியை எட்டாத உயரத்தில் ஏணியை வைத்து ஏற்றி வைத்துவிட்டன. ஏழை மக்கள் என்ன செய்வது? வாழ்க்கைக்கான போராட்டத்தோடு கல்விக்கான போராட்டமும் தொடர்கிறது.

தற்போது உள்ள கல்வி அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிரியர்கள்,  நடத்தக்கூடிய பாடங்கள் புரிகிறதா  இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் அவ்வளவு தான். அந்த ஆங்கிலம் அவனுக்கு விளங்குகிறதா இல்லையா என்பதைப் பற்றி அக்கரையில்லை. இதில் என்ன என்றால் ஆங்கில வழிப் பள்ளிகளில் என்று சொல்லி அதாவது இலக்கணம் இல்லாமல் பேசி ஆங்கில அறிவையே மாணவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். பாமர மக்கள் நம் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலம் பேசுவதாக நினைத்துக் கொண்டு உண்மை நிலை அறியாது இருக்கிறார்கள். ஆங்கில வழிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணத்தையே முறைப்படி கற்பிப்பதில்லை. இலக்கண முறைப்படி கற்பிக்காத எந்த மொழியும் வளர்ச்சி அடைந்ததாக சரித்திரம்; இல்லை.

ஆகவே இல்லாதவற்றைக் காரணங் காட்டி கல்வியில் எமது மக்களை பின்னடையவைப்பது பள்ளியில் பயிலும் மாணவர்களதோ ஆசிரியர்களதோ குற்றம் என்பதற்கு மேலாக அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்