கிளிநொச்சி நகரம் ஏனைய நகரங்கள் போன்று திட்டமிட்ட நகரமாக வேண்டும்

கிளிநொச்சி நகரம் ஏனைய நகரங்கள் போன்று திட்டமிட்ட நகரமாக அமைய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையின் வர்த்தகர்கள் சிலர் நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனின் அலுவலகமான அறிவகத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளதுடன், அவரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி நகரமானது 19824ஆம் ஆண்டு தனிமாவட்டமாக உருவாவதற்கு முன்னரே அமையப்பெற்ற நகரம். ஆனால் இது திட்டமிடப்படாது பரந்தன் தொடக்கம் முறிகண்டி வரைக்குமான ஒரு நாடாத்தொடர் வர்த்தக நகரமாகக் காணப்படுகின்றது.

ஏனைய நகரங்கள் போன்று கிளிநொச்சி நகரமும் திட்டமிடப்பட்ட நகரமாக அயைமப்பெற வேண்டுமென்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுய லாபங்களுக்காகவும் நகரத்திட்டமிடலை புறந்தள்ளமுடியாது.

கிளிநொச்சிப் பொதுச்சந்தையானது, சந்தையில் இருக்கின்ற வர்த்தகர்களுக்கு மாத்திரமானது அல்ல. மாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று. அவர்களது தேவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இதனடிப்படையில் நகரத்திட்டமிடலுக்கு அமைவாக 735 மில்லியன் ரூபா செலவில் இந்த நவீனகடைத் தொகுதிகள் அமையவுள்ளது. இதனால் எமது வர்த்தகர்களை பாதிக்கின்ற எந்தச்செயற்பாட்டையும் நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை.

இந்த நவீன கடைத்தொகுதி அமைவதற்கு சில அரசியல்கட்சிகளுக்குப் பிடிப்பில்லாமல் இருக்கலாம். காரணம் அவர்கள் தங்களுடைய காலத்தில் அமையப்பெறவில்லை. மாறாக இப்போது கிடைக்கப்பெற்றிருப்பது என்ற நிலை காணப்படலாம்.

அத்துடன், கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற பொருளாதார மத்திய நிலையமானது ஒரு திட்டமிடப்படாத நிலையில் அமையப்பெற்றிருக்கின்றது.

இந்த பொதுச்சந்தையை அண்டி அமைந்திருந்தால் சாலப்பொருத்தமாக இருக்கும். தற்போது இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் சில்லறை வியாபாரங்கள் நடைபெறுகின்றன. சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதனை புகையிர வீதிக்கு ஏ-09 வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பொதுச்சந்தையை அண்மித்து நன்கு திட்டமிடப்பட்டு அமைத்திருந்தால் பொருட்களை ஏற்றியிறக்குவதற்கும் சந்தை வர்த்தகத்தைப்பாதிக்காத வகையிலும் இருந்திருக்கும்.

ஆனால், அப்போது இருந்த ஆட்சியாளர்கள் ஒரு குறுகிய நோக்கத்தில் இதனைச் செய்துள்ளதால் இப்போது பாதிக்கப்படுவது, எமது வர்த்தகர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்