இலங்கை அரசுக்கு கனடாவின் அழுத்தம் அவசியம்!

இலங்கை அரசுக்கு கனடாவின் அழுத்தம் அவசியம்! – அந்நாட்டுத் தூதுவரிடம் நேரில் வலியுறுத்தினார் யாழ். ஆயர் (photo) 
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு  கனடா அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்”
– இவ்வாறு தன்னை நேற்றுச் சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரிடம் வலியுறுத்தினார் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்.
யாழ்ப்பாணத்துக்குச் சென்ற இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், யாழ். மறைமாவட்ட ஆயரை அவரது இல்லத்தில் நேற்றுக் காலை சந்தித்தார்.
“போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் பலர்  காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
அவர்களுக்கு உரிய பதிலை இலங்கை அரசு இன்னும் வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் கனடா அரசு யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்யவேண்டும்” என்று கனேடியத்  தூதுவரிடம்  யாழ். ஆயர் எடுத்தரைத்தார்.
“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கி வருகிறது. தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்” என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் பதிலளித்தார்.
………………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்