பள்ளியில் 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி நிற்க வைத்த தண்டனை கொடுத்த கொடூரம்.

இடாநகர்: அருணாச்சலில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி, அவர்களை, சக மாணவர்கள் முன், நீண்ட நேரம் நிற்க வைத்து, தண்டனை கொடுத்த கொடூரம் நடந்து உள்ளது.


விமர்சனம்:

அருணாச்சல பிரதேசத்தில், பபும் பாரே மாவட்டத்தில், சகாலி என்ற நகரத்தில், காந்தி பாலிகா வித்யாலயா என்ற, தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய தனியார் பள்ளி உள்ளது. சமீபத்தில், இந்த பள்ளியில், தலைமை ஆசிரியரையும், சில மாணவர்களையும் பற்றி, தரக்குறைவாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த ஒரு காகிதம், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் கிடந்தது. இதைப் படித்து பார்த்த தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், கடும் ஆத்திரம் அடைந்தனர்.

கொடூர தண்டனை:

ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் இந்த காகிதம் கிடந்ததால், அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவியர் தான், இதை எழுதியிருப்பர் என, ஆசிரியர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, அந்த இரண்டு வகுப்புகளிலும் படிக்கும், 88 மாணவியரையும் வரவழைத்து, மற்ற மாணவியர் முன் நிறுத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிய ஆசிரியர்கள், உள்ளாடைகளுடன், அந்த மாணவியரை நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.

வழக்கு பதிவு:

இதுகுறித்த தகவல், அங்குள்ள மாணவர் அமைப்பினருக்கு தெரிந்தது. அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், தலைமை ஆசிரியரும், மேலும் இரண்டு ஆசிரியர்களும் தான், மாணவியருக்கு இந்த கொடூர தண்டனையை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்