மழை பெய்த இடங்கள்…..

மரத்தில் விழுந்த மழை
பச்சை இலையைப்
பார்த்துக் கழுவி
காய்ந்த இலையை
கழற்றி விட்டது

குடிசையில் விழுந்த மழை
கோப்பைகளிலும் சட்டிகளிலும்
குடியேற்றம் அமைத்தது

வீதியில்
விழுந்த மழை
காக்கிச் சட்டையின்
கலக்ஸனைக் குறைத்தது

குடையில் விழுந்த மழை
இடையில் இறங்கி
உடையை நனைத்து
நடையைக் கூட்டியது

முற்றத்தில் விழுந்த மழை
கடைக்குட்டி செய்த
காகிதக் கப்பலை
கவிழ்த்துப் போட்டது

நீர்த்தேக்க மழை
ஊர் மக்கள் வயிற்றில்
புளியைக் கரைத்து
கிலியைத் தந்தது

கடலில் பெய்த மழை
கட்சியின் கொள்கை போல
காணாமல் போனது

மைதானத்தில் பெய்த மழை
இலங்கை அணிக்கு
இடைக்கிடை உதவியது

எல்லா இடங்களிலும்
இடை விடாது பெய்த மழை
பேஷ் புக் பதிவுகளாய்
பெரு வெள்ளம் எடுத்தது..!

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்