வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம்!    – அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளர் –

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம்!    – அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளர் –

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம் ஆகும் என்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்குமான பணிப்பாளர் முஹமட் அப்துல் காதர் சைபுதீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் உள்ள ஹிரா சர்வதேச பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை தின விழா இப்பாடசாலையின் பணிப்பாளரும், அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரியின் பதிவாளருமான ஐ. பியாஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதாவுல்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

ஒவ்வொரு பிள்ளைக்கும் அடிப்படையில் பாடசாலை கல்வியை விட வீட்டு சூழலே முக்கியமானதாகும். இன்னொரு வகையில் சொன்னால் வீட்டு சூழலே பிள்ளைகளின் முதலாவது பள்ளிக்கூடமும் கல்வி கூடமும் ஆகும். வீட்டில் பெற்றோர் நடந்து கொள்கின்ற விதங்களையே பிள்ளைகள் முன்மாதிரிகளாக கொள்கின்றனர். எனவே வீட்டில் பெற்றோர் தவறான, பிழையான, கூடாத வார்த்தை பிரயோகங்களை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது. இல்லையேனில் பிள்ளைகள் திரும்ப திரும்ப இவ்வார்த்தைகளை சொல்லிப் பழகி, பழக்கத்தில் கொள்வார்கள்.

வீட்டு சூழலும், பாடசாலை கல்வியிலும் இசைந்து செல்வனவாக இருக்க வேண்டும். பாடசாலையில் நல்ல போதனைகள் கற்பித்து கொடுக்கப்பட வீட்டில் இருந்து தீய போதனைகள் குழந்தைகளுக்கு ஊட்டப்படுகின்றபோது சரியான தெரிவு எது? என்று பிள்ளைகள் தடுமாற நேர்கின்றது . இதனால் பிள்ளைகளுக்கு மன பிறழ்வுகள் நேர்ந்து விடுகின்றன.

மேலும் சிறிய வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியும் பாடசாலைகளில் சேர்த்து கற்பிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒழுக்கசீலர்களாக உருவாவதோடு வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் கொடுக்க கூடிய நற்பிரஜைகளாகவும் வளர்வார்கள்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி என்கிற பெருமை ஹிரா சர்வதேச பாடசாலைக்கு உள்ளது. இப்பாடசாலை 1998 களில் ஆரம்பிக்கப்பட்டபோது இங்கு முதன்முதல் அனுமதி பெற்ற மாணவர்களில் எனது மகனும் ஒருவர் ஆவார் என்கிற வகையில் இப்பாடசாலையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பும், உறவும் உள்ளன என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன். நான் அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளராக நியமனம் பெற்ற பிற்பாடு முதன்முதல் கலந்து கொள்கின்ற பொது நிகழ்வும் இதுவே ஆகும். இப்பாடசாலையில் மார்க்க கல்வி பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு வெகுசிறப்பாக இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனது இப்பதவி காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை இப்பாடசாலைக்கு செய்து கொடுக்க காத்திருக்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்