‘2.ஓ’ ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியத் திரையுலகில் பாகுபலி படத்திற்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் த யாராகி வரும் படம் 2.0. ஷங்கர், ரஜிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

இப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே படம் அன்றைய தினம் வெளிவராது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ள பேட் மேன் ஹிந்திப் படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தகவல் மேலும் உறுதியாக இருந்தது. இருந்தாலும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படம் வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தது.

நேற்று 2.0 பட வெளியீட்டைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி படம் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நேற்று காலையிலேயே நாம் 2.0 படம் ஏப்ரலில்தான் வெளியாகும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

லைக்கா நிறுவனம் சார்பாக அதன் கிரியேட்டிவ் ஹெட், ராஜு மகாலிங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைக்கா புரொக்ஷன்ஸ், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஷங்கர் ஆகியோரின் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படமான 2.0 படம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்படும்.

நாட்டின் அதிகப் பொருட்செலவிலான 3 டி படமான இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

உயர்தரமான இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வெளியீட்டிற்கான பணிகளில் படக் குழுவினர் தயாராக உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், நவம்பர் மாதம் டீசர் வெளியிடாததைப் பற்றியோ, டிசம்பர் மாதத்தில் டிரைலர் வெளிவருமா என்பதைப் பற்றியே அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்