கட்டப்பட்டு ஒரு வருடத்துக்குள்ளே, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்..

நெல்லை மாவட்டம் களக்காடு திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இதனால் கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை மீண்டும் நிரம்பியது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்ததால் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி நம்பியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் அறிவுறுத்தினர்.
இதனிடையே நம்பியாற்று வெள்ளத்தில் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலம் உடைந்தது.
இந்த பாலம் கட்டப்பட்டு ஒரு வருடமே ஆகிறது. ரூ.40 லட்சம் [இந்தியப் பெறுமதி] மதிப்பில் இது கட்டப்பட்டது. தரமற்ற பாலமாக கட்டப்பட்டதால் வெள்ளத்தில் உடைந்ததாக பொதுமக்கள் குற்ற‌ம் சாட்டி உள்ளனர். பாலம் உடைந்ததால் திருக்குறுங்குடியில் இருந்து ஆவரந்தலை, கட்டளை, வன்னியன்குடியிருப்பு உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல 6 கிலோமீட்டர் சுற்றியே போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. களக்காடு சுற்றுப்பகுதியில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கன மழையினால் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி குளம் நேற்று காலை உடைந்தது. இதனால் இந்த குளத்து தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கும், ஆனைகுளத்துக்கும் பாய்ந்து சென்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள், பொதுமக்கள் விரைந்து வந்து உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கன மழையினால் களக்காடு, திருக்குறுங்குடி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்களும் சேதமாகி உள்ளது. இதனால் மின்வினியோகமும் தடைபட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்