வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூசிலாந்து அபார வெற்றி.

வெலிங்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ‘பேட்டிங்’, ‘பவுலிங்கில்’ அசத்திய நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 134, நியூசிலாந்து 520/9 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில், 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் (79), ஹோப் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிராத்வைட் ஆறுதல்

நேற்று, நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நியூசிலாந்து பவுலர்கள் தொல்லை தந்தனர். சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய கிரெய்க் பிராத்வைட் (91) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பவுல்ட் ‘வேகத்தில்’ ஹோப் (37) வெளியேறினார். அடுத்து வந்த சேஸ் (18), சுனில் அம்ரிஸ் (18) நிலைக்கவில்லை. வாக்னர் பந்தில் டவ்ரிச் (3), கேப்டன் ஹோல்டர் (7) ‘பெவிலியன்’ திரும்பினர். கீமர் ரோச் (7), கம்மின்ஸ் (14) ஏமாற்றினர்.

இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 319 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. காப்ரியல் (4) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 3, பவுல்ட், கிராண்ட்ஹோம், வாக்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (7+2) கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வாக்னர், ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்