திருமண வீட்டில் நேர்ந்த துயரம்.. டி.வி. விழுந்து 1½ வயது சிறுவன் பலி..

கரூரை சேர்ந்தவர் கைலாஷ் (வயது 27). இவரது மனைவி அகிலா (24). இவர்களது 1½ வயது மகன் அபிஷேக். கைலாஷ் குடும்பத்துடன் கேரளா மாநிலம் வடக்கஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

நேற்று திருமண வீடு களை கட்டியது. குழந்தை அபிஷேக் வீட்டுக்குள் விளையாடினான். உறவினர்கள் வீட்டுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் வீட்டில் இருந்த டி.வி. ஸ்டேண்டை பிடித்து இழுத்தான்.

அப்போது டி.வி. ஸ்டேண்டில் இருந்த டி.வி. அபிஷேக் மீது விழுந்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அலறினான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அபிஷேக்கை மீட்டு வடக்கஞ்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்