இலங்கை ஒரு நாள் குழாமில் இணைய இந்தியா பயணிக்கும் 9 வீரர்கள்

இம்மாதம் 10ஆம் திகதி இந்தியாவின் தர்மாசாலாவில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாத்தினை புதிய தலைவர் திசர பெரேரா வழிநடாத்தவுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ள இலங்கை அணி, அடுத்து எதிர்கொள்ளவுள்ள பலம் கொண்ட இந்திய அணியுடனான ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட ஒரு வலுவான குழாத்தினை இலங்கை கிரிக்கெட் இன்று (04) அறிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு இந்த வருடம் மிகவும் மோசமான ஆண்டாகவே உள்ளது. இந்த ஆண்டில் 21 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை வீரர்கள் வெறும் 4 வெற்றிகளை மாத்திரமே பெற்று மிகவும் மோசமான பதிவுடன் உள்ளனர். இதில் 12 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

குறித்த தோல்விகளில், உபுல் தரங்கவின் தலைமையில் தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் பெற்ற வைட்வொஷ் தோல்விகள் மிக மோசமான முடிவுகளாக அமைந்தன. இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக திசர பெரேராவை நியமிக்க இலங்கை தேர்வுக்குழு கடந்த வாரம் முடிவெடுத்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் காலியில் இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் கையில் ஏற்பட்ட உபாதையினால் நீண்ட கால ஓய்வில் இருந்த அசேல குனரத்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, அவர் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியின் மத்திய வரிசையைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று, அணிக்கு மேலும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் மத்திய வரிசையைப் பலப்படுத்துவதற்காக முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் அணியில் இணைந்துள்ளார். அவரும் உபாதை காரணமாக முன்னர் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை குழாமில் இடம்பெறவில்லை.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் 5 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இதன் காரணமாக அவர் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்த்து மத்திய வரிசையில் ஆடும் ஏனைய வீரர்களான சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரும் ஐக்கிய அரபு இராட்சியத்தில் பாகிஸ்தானுடன் சோபிக்கத் தவறியமையினால் அடுத்த ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர் குசல் மென்டிசை இலங்கை தேர்வுக் குழுவினர் தொடர்ந்தும் இணைக்க இனங்கவில்லை.

அதேநேரம், கடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து உபாதையை எதிர்கொண்டுவந்த அணியின் மற்றொரு இளம் அதிரடி ஆட்டக்காரர் குசல் ஜனித் பெரேரா தற்பொழுது மற்றொரு உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால் அவரும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கு அணியில் இணைக்கப்படவில்லை. பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் இருந்து திரும்பிய பெரேராவின் கையில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் 12 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 42.41 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ள அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குனதிலக்க பாகிஸ்தான் அணியுடனான இறுதித் தொடருக்கான குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், இடது கை துடுப்பாட்ட வீரரான அவர், இந்திய அணியுடனான போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கை ஒரு நாள் அணியில் இணைகின்றார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் செயற்படவுள்ளனர். அவர்களுடன் இடதுகை சுழற்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் சிசித் பதிரன ஆகியோருக்கு குழாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்பொழுது ஒரு நாள் குழாமிற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய 9 வீரர்களும் இன்று இரவு (04) நாட்டில் இருந்து இந்தியா செல்லவுள்ளனர்.

இலங்கை ஒரு குழாம்

திசர பெரேரா (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குனதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குனரத்ன, சதுரங்க டி சில்வா, சிசித் பதிரன, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மன்த சமீர, சுரங்க லக்மால், நுவன் பிரதீப்

இலங்கை – இந்திய ஒரு நாள் தொடர் அட்டவணை

முதல் போட்டி – தர்மாசாலா – டிசம்பர் 10ஆம் திகதி – மு.ப 11.30

இரண்டாவது போட்டி – மொஹாலி – டிசம்பர் 13ஆம் திகதி – மு.ப 11.30

மூன்றாவது போட்டி – விசாகபட்டினம் – டிசம்பர் 17ஆம் திகதி – பி.ப 1.30

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்