பெற்றெடுத்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்..

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் பாறையடி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளியான இவருக்கு ரேவதி (வயது 42) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பாண்டி இறந்து விட்டார்.

இந்நிலையில் மகன், மகளுடன் ரேவதி வசித்து வந்தார். தற்போது மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். மகன் ஐ.டி.ஐ. படித்து விட்டு கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பீடி சுற்றும் தொழிலாளியான ரேவதிக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர் கர்ப்பம் ஆகி உள்ளார். நேற்று காலையில் வீட்டில் இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தகாத உறவில் பிறந்த அந்த குழந்தையை வளர்த்தால் பெரும் அவமானம் என கருதிய ரேவதி குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு துணி சுற்றியவாறு அப்பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான கிணற்றில் வீசி விட்டு வீடு திரும்பி விட்டார்.

இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் ரேவதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதான ரேவதி போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது கணவர் இறந்தது முதல் எனக்கு பலருடன் தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் நான் சமீபத்தில் கர்ப்பம் ஆனேன். நான் கர்ப்பம் ஆனது எனக்கு முதலில் தெரியவில்லை. குழந்தை நன்றாக வளர்ந்த பிறகு தான் தெரிய வந்தது. இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என சரியாக தெரியாது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்படும் என கருதிய நான் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் கிணற்றுக்குள் வீசப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மோட்டார் மூலம் கிணற்றுக்குள் இருக்கு தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. ஆனால் கிணற்றிலிருந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. இன்று காலையும் 2-வது நாளாக இந்த பணி நடந்து வருகிறது. கிணற்றுக்குள் அதிகமான தண்ணீர் இருப்பதால் முத்துக்குளி வீரர்களை வரவழைத்து குழந்தையின் உடலை மீட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்