பெண் குழந்தையை, விற்க முயன்ற தாய்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் விஜயா(வயது 36). இவரது கணவர் இறந்து 2 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். விஜயா கூலிவேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் விஜயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் தனிமையில் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதில் விஜயா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் விஜயா தனக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளதால் தற்போது பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என நினைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த குழந்தை விற்க முடிவு செய்தார்.

அப்போது பண்ருட்டி பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் குழந்தையை விற்பதற்கு உதவி செய்வதாக விஜயாவிடம் கூறினார். அதற்கு விஜயாவும் சம்மதம் தெரிவித்தார். குழந்தையை விற்றதில் வரும் தொகையை இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம் என அமுதா கூறினார்.

இதில் விஜயாவுக்கும், அமுதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் ரஞ்சித், மல்லிகா ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளால் விஜயாவை திட்டி தகராறு செய்தனர்.

ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குழந்தையை விற்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அமுதா ரஞ்சித், மல்லிகா ஆகிய 3 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விஜயாவிடம் அந்த பெண் குழந்தை இருப்பது பாதுகாப்பில்லை என கருதி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அன்புசெல்வி அந்த குழந்தையை மீட்டு இன்று காலை கடலூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

பெற்ற தாயே குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்