புதிய செல்போன் வாங்கி வந்ததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்..

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (38). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (37). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.

சத்தியஸ்ரீ,சசிதா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முத்துலட்சுமிக்கு சூலக்கரை பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருந்தது. இவர்களுக்கு அருந்ததி என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமி முதல் கணவரை பிரிந்து 2-வதாக பாலமுருகனை திருமணம் செய்து கொண்டார். முதல் குழந்தையையும் தன்னுடன் வளர்த்து வந்தார்.

பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பொள்ளாச்சி சென்ற அவர் ரூ. 9 ஆயிரத்திற்கு புதிய செல்போன் வாங்கி கொண்டு போதையில் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று இருந்த மனைவி முத்துலட்சுமியிடம் செல்போனை காண்பித்து உள்ளார். அதற்கு அவர் தற்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம்.

இந்த சமயத்தில் புதிய செல்போன் தேவையா? என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் தோட்டத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து முத்துலட்சுமி தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

பேரூர் டி.எஸ்.பி. வேல் முருகன், கிணத்துக் கடவு இன்ஸ் பெக்டர் திருமேணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொன்ற பாலமுருகன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்