‘கனவு நனவானது’ * வாஷிங்டன் சுந்தர் உற்சாகம்.

சென்னை: ‘‘ இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு, நிறைவேறியுள்ளது. இதற்கு, எனது தந்தையும், பயிற்சியாளரும் தான் காரணம்,’’ என,தமிழகத்தின் ‘ஆல் ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர்தெரிவித்தார்.

தமிழக அணி வீரர் வாஷிங்டன் சுந்தர், 18. இடது கையில் பேட்டிங் செய்யும் இவர், வலது கையினால் பந்தை சுழற்றுவார். கடந்த ஐ.பி.எல்., தொடரில் புனே அணி வீரர் அஷ்வின் காயத்தால் விலகிக் கொள்ள, வாய்ப்பு வாஷிங்டனுக்கு சென்றது. இதனால், இந்தியாவின் தோனி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சிற்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்தார். அணியில் களமிறங்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்திய ‘ஜூனியர்’ அணி பயிற்சியாளர் டிராவிட், ஆலோசனை இவரது பவுலிங்கிற்கு பெரிதும் கைகொடுத்தது. சமீபத்தில் தமிழக அணி விஜய் ஹசாரே தொடரில் கோப்பை வெல்ல, இவரது ஆல் ரவுண்டர் திறமை உதவியது.

இம்முறை ரஞ்சி கோப்பை தொடரில் திரிபுராவுக்கு எதிராக சதம் (159 ரன்) அடித்த போதும், அடுத்தடுத்த போட்டிகளில் இவருக்கு பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.டி.என்.பி.எல்., தொடரில் துாத்துக்குடி அணிக்காக விளையாடுகிறார்.

தற்போது இலங்கை அணிக்கு எதிரானமூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில்(டிச.,20, டிச., 22, டிச., 24) பங்கேற்கும், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில்,‘‘ இந்திய அணியில் இடம் பெற்று, அதில் நாமும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பது கனவு. இது நிறைவேறியுள்ளது. என்னை இந்தளவுக்கு முழு கிரிக்கெட் வீரராக மாற்றியதில் தந்தை சுந்தர், பயிற்சியாளர் செந்தில்நாதன் என, இருவருக்கும் முழு பங்குண்டு. சமீபத்தில் ‘யோ யோ’ தேர்வில் தேறாத நிலையில், மீண்டும் கடினமாக முயற்சித்து வெற்றி பெற்றது, பெரிய நிம்மதியாக உள்ளது,’’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்