மாற்றுக் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் தோற்கடித்து இம்முறையும் கொடிகட்டிப் பறக்கும் கூட்டமைப்பு!

மாற்றுக் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் தோற்கடித்து இம்முறையும் கொடிகட்டிப் பறக்கும் கூட்டமைப்பு! – பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சூளுரை 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் நோக்குடன் சில மாற்றுக் கட்சிகளும், பல சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கத் தீர்மானித்துள்ள நிலையில், அவற்றைத் தோற்கடித்து இம்முறையும் கூட்டமைப்பு கொடிகட்டிப் பறக்கும் என்று அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுபவர்கள் தொடர்பிலோ அல்லது கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்கள் குறித்தோ நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்” எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இந்தக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது” எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆசனப் பங்கீடு தொடர்பில் ஒருமித்த தீர்மானத்துக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வந்துள்ளன” எனவும் அவர்கள் கூறினர்.
“எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவாகை சூடிய வரலாற்றை எவரும் மறந்திடலாகாது” என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா எம்.பி. (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்