நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் – அமீர் அலி

நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சுரக்ஷா காப்புறுதி திட்டத்தினூடாக 5 வயது தொடக்கம் 19 வயது வரையுள்ள மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி மீறாவோடை பதுரியாநகர் மினா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டட திறப்பு விழாவும், 7வது பரிசளிப்பு விழாவும் புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் உங்கள் பிள்ளைகளை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக சுரக்ஷா என்ற காப்புறுதி திட்டத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலுள்ள நல்லாட்சி அரசாங்கம் எல்லா பிள்ளைகளையும் காப்புறுதி செய்து கொடுத்திருக்கின்றது.

உங்கள் பிள்ளைகள் உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற பொழுது ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாவாக கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்னுரிமை கொடுத்திருக்கின்றது என்று சொன்னால் கல்விக்காக நல்லாட்சி அரசாங்கம் எவ்வளவு தூரம் செலவு செய்கின்றது என்று பாருங்கள்.

உங்கள் பிள்ளைகளின் கல்வி ரீதியான மாற்றத்தை உங்கள் காலடியில் கொண்டு தந்தவன், வீதிப் பிரச்சனை, மலசலகூட பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை அரசியல்வாதியாக கல்குடா பிரதேசத்தில் தீர்த்து தந்திருக்கின்றேன். இவற்றை எதிர்காலத்திலும் செய்து தருவேன்.

பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டடம் எவ்வளவு காலம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர்கள், எத்தனை அமைச்சர்கள், எத்தனை கட்சிகள் வலம் வந்து சென்று விட்டார்கள் இதனை உங்கள் பிள்ளைகளுக்கு முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கடமை அவர்களிடத்தில் வரவில்லை என்று சொன்னால் இவர்களது அரசியல் நிலவரம் தங்களுக்கு தெளிவாக விளங்க வேண்டும்.

பசி உள்ளவனுக்குத் தான் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். எங்களுடைய அறிவுத் தாகத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் கிடையாது. வெளியூர் அரசியல்வாதிகளுக்கு எங்களுடைய பிரச்சனைகள் தெரியாது. உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தெரியும் என்றார்.

பாடசாலை அதிபர் எல்.ரி.எம்.சாதிக்கீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எஸ்.நௌபல், உதவிக் கல்விப் பணிப்பாளர் கலீல் றகுமான், பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் நான்கு வருடங்கள் சித்தியடைந்த மாணவர்கள், பாடசாலை வரலாற்றில் பல்கலைக் கழகம் சென்றவர்கள், பாடசாலையில் கல்வி கற்று அரச தொழில் புரிவோர் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அதிபர் காரியலயத்துடன் இணைந்த வகுப்பறையைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்