வெலிக்கடை படுகொலை ரிட் மனு: விசாரணை அறிக்கைகள் 13 இல்!

வெலிக்கடை படுகொலை ரிட் மனு: விசாரணை அறிக்கைகள் 13 இல்!
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கைதிகள் 27 பேர் படுகொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் எதிர்வரும் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய மற்றும் நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  மனு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, விசாரணை வெளிப்படையாக இருக்கவேண்டும் எனவும், அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் கடந்த அமர்வில் தான் கோரியமையை மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரத்னவேல் சுட்டிக்காட்டினார்.
அதுதொடர்பான அறிக்கைகள், அடுத்த அமர்வில் வழங்கப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இன்னும் தயாரில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோன்  மன்றில் அறிவித்தையடுத்து,  மனு எதிர்வரும் 13ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின்போது, இராணுவத்தினர், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோரிடம் புதிதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோன் மன்றில் அறிவித்திருந்தார்.
மேலும், 75 சதவீதமான விசாரணைகள் முடிடைந்துள்ளன என்றும் மேலதிக விசாரணைகளுக்கு 4 தொடக்கம் 6 வாரங்கள் தேவை என்றும் குறிப்பிட்டதுடன், முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்தே, மனு நேற்றையதினம் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் 2007ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, 2009ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்ட  டபிள்யூ.எஸ்.நந்திமால் சில்வா என்பவராலேயே இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஒரு மணியளவில் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் சிறைச்சாலைக்குள் நுழைந்து தேடுதல் நடத்தவுள்ளனர் என்ற தகவல் தமக்குக் கிடைத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்குமிடையில் சிறைச்சாலை வாயிலில் வைத்து, வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் திகதி முற்பகல் 10 மணிவரையிலும் இராணுவத்தினரின்  கட்டுப்பாட்டில் சிறைச்சாலை இருந்ததாகவும் அக்காலப்பகுதிக்குள் 27 கைதிகள் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி  இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில்  தான் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்