புகையிரத சேவையாளர்களின் பணிபகிஷ்கரிப்பால் மலையகத்திற்கான 16 ரயில் சேவைகள் முடக்கம்.

(க.கிஷாந்தன்)

புகையிரத சேவையாளர்கள் 06.12.2017 அன்று நள்ளிரவு 12 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக 07.12.2017 அன்று மாத்திரம் மலையத்திற்கான 16 புகையிரத சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவத்தார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக 08.12.2017 அன்று பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

பலர் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து புகையிரதம் இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் மீண்டும் பஸ் நிலையங்களை நோக்கிச்சென்றனர்.

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் ஓரளவு தாமதமாகின. 06.12.2017 அன்று இரவு வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் 08.12.2017 அன்று அதிகாலை வேன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  தபால் திணைக்களத்திற்கு அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாமதமாகி தபால் சேவைகள் இடம்பெற்ற போதிலும் பாதிப்பில்லையென தபால் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 08.12.2017 அன்று பாடசாலை விடுமுறை என்பதால் பலர் புகையிரத கடவூச்சீட்டுக்களை பெற்றிருந்தவர்கள் செல்ல முடியாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக புகையிரத திணைக்களத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பல பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக பாரியளவில் பயணிகள் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 12 ம் திகதி க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுளளதால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு  புகையிரத சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்