கணவர் இறந்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை..

புதுவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 50). இவர்களுக்கு மதுமிதா (18) என்ற மகள் உள்ளார். இவர் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார்.

புதுவை கொசக்கடை நெல்லுமண்டி சந்தில் நகை கடை நடத்தி வந்த பாலகிருஷ்ணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்து போனார்.

கணவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் முத்துலட்சுமி சோகத்துடன் இருந்து வந்தார். முத்துலட்சுமிக்கு அவரது மகள் மதுமிதா ஆறுதல் கூறி வந்தபோதும் கணவர் நினைவிலேயே முத்துலட்சுமி இருந்து வந்தார்.

இந்த நிலையில் மனமுடைந்த முத்துலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை சமையலறைக்கு சென்ற முத்துலட்சுமி அங்கிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் முத்துலட்சுமி அலறினார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மதுமிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து முத்துலட்சுமியை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் முத்துலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்