“எட்டு கெட்டப்பிற்கு ஏகப்பட்ட வலி தாங்கினார் விஜய் சேதுபதி..!”

எதார்த்தமான நடிப்பால் சிக்ஸர் அடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் எமன் என்ற பெயரில் நடித்து வரும் விஜய் சேதுபதி படத்துக்காக நிறைய கெட்டப் போட்டிருக்கிறார். படத்தின் அப்டேஸூக்காக இயக்குநர் ஆறுமுக குமாரை தொடர்பு கொண்டோம்.

“என்னுடைய முதல் படத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதியை எனக்கு நீண்ட ஆண்டுகளாகவே தெரியும். அவர் ஷார்ட் ஃபிலிமில் நடித்து கொண்டிருந்த காலத்திலிருந்து அவருடன் நட்பில் இருக்கிறேன். சென்னையில் விஸ்காம் படித்த காலத்திலிருந்து சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசை எனக்குள்ளே இருந்தது. அதனாலேயே படித்து முடித்தவுடன் நிறைய ஆர்ட் ஃபிலிம்ஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ் எல்லாவற்றிலும் வேலை பார்த்தேன்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நானும் உதவி இயக்குநராய் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குள்ளே எதாவது கதை தோன்றினால் விஜய் சேதுபதியிடம் கூறுவேன். அப்போதிலிருந்தே சேர்ந்து படம் பண்ணலாம்னு இருவரும் பேசி பேசி தற்போதுதான் அது நிறைவேறி இருக்கிறது.

இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதி நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். படத்தில் அவருக்கு நிறைய கெட்டப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புக்கு மேல் நடித்திருக்கிறார். மேக்கப் போட ஆரம்பித்துவிட்டால் அந்த கெட்டப்பின் ஷூட் முடிக்கிற வரைக்கும் மேக்கப்பை கொஞ்சம் கூட அவர் கலைக்க மாட்டார். கெட்டப்புக்கு ஏற்றவாறு முடி அலங்காரம் செய்யும் போது அவருக்கு ரொம்ப வலியாக இருக்கும். நீண்ட முடியை வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது அது மிகவும் வலிக்கும். ஆனால், அதையெல்லாம் பொருட்டாக எடுத்து கொள்ளாமல் விஜய் சேதுபதி அபாரமாக நடித்தார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல ரீச் ஆனது. ஃபர்ஸ்ட் லுக்காக நாங்கள் ரொம்ப யோசிக்கவே இல்லை. ஏன்னா, படத்தில் எமனாக அவர் தோன்றிருக்கும் கெட்டப்பைத்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அறிமுகப்படுத்தினோம்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு நிகரான கேரக்டர் கெளதம் கார்த்திக்கும் இருக்கும். விஜய் சேதுபதிக்கு முன்பாகவே படத்தில் முதலில் கமிட் ஆனது கெளதம் கார்த்திக்தான். கெளதம் கார்த்திக் இந்த ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும்னு நான் விஜய் சேதுபதியிடம் சொன்னவுடனே கெளதமுடன் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்தார் விஜய் சேதுபதி. அதன்பிறகுதான் விஜய் சேதுபதி அதிகாரபூர்வமாக படத்தின் கமிட் ஆனார். அதே போல் ரமேஷ் திலக் கேரக்டரும் ரமேஷ் செய்தால் நன்றாக இருக்கும்னு விஜய் சேதுபதிதான் சொன்னார். கிட்டத்தட்ட என் படத்துக்கு காஸ்ட்டிங் டைரக்டராகவே விஜய் சேதுபதி மாறிட்டார்.

இந்தப் படம் முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். விஜய் சேதுபதி படத்துக்காக போட்டு இருக்கும் நிறைய கெட்டப்புகள் படத்தின் சுவாரஸியத்தை கூட்டும். மேலும் படத்தின் கதை யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும். ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்காக இசையமைத்திருக்கிறார். கதையோடு சேர்ந்த ஒரு இசையை கொடுத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசை வேலை தற்போது சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் ஆடியோ ட்ராக் இரண்டையும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்றவரிடம் படம் எப்போது ரிலீஸ் என்றால்,”பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று ஐடியா இருக்கிறது. பட், இன்னும் சரியான தேதி முடிவாக இல்லை. ஆனால், ஜனவரிக்கு படம் கண்டிப்பாக வெளியாகும்’’ என்று தெரிவித்தார் இயக்குநர் ஆறுமுக குமார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்