காரைதீவு மகா சபையினால் தெரிவுசெய்யப்பட்ட சுயேச்சைக்குழு இன்று நியமனப்பத்திரம் தாக்கல்.

காரைதீவு பிரதேச சபையில் போட்டியிட காரைதீவு மகா சபையினால் தெரிவுசெய்யப்பட்ட சுயேச்சைக்குழு இன்று(13) புதன்கிழமை நியமனப்பத்திரத்தை சுபநேரத்தில் தாக்கல் செய்தது.

முன்னதாக சுயேச்சைக்குழுத்தலைவர் ச.நந்தகுமார் தலைமையிலான குழுவினர் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்திற்குச்சென்று பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களிடம் ஆசிபெற்று விசேட பூஜையில் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் அம்மனின் அருளாசிபெற்று அம்பாறைக்கு  சென்று நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

அம்பாறை மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரத்னவிடம் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்கஅதிபருமான துசித வனிகசிங்கவும் உடனிருந்தார்.

சுயேச்சைக்குழுத்தலைவர் ச.நந்தகுமார் நியமனப்பத்திரத்தைக் கையளித்தார். அவருடன் மற்ற வேட்பாளர்களான மா.புஸ்பநாதன் சி.நந்தேஸ்வரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இன்று  புதன்கிழமை சரியாக 11.15மணியளவில் சுபநேரத்தில் காரைதீவுப்பிரதேசபையில் போட்டியிடுவதற்கான முதலாவது சுயேச்சைஅணி நியமனப்பத்திரத்தைத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

07 வட்டாரங்களைக்கொண்ட காரைதீவுப்பிரதேசசபைக்கு 4பெண்வேட்பார்கள் உள்ளிட்ட 14வேட்பாளர்கள் போட்டியிடுவர். 11 உறுப்பினர்கள் தெரிவாவர். வட்டாரரீதியில் 7உறுப்பினர்களும் விகிதாசாரமுறையில் 4பேரும் தெரிவாவார். இவர்களில் இருவர் பெண்களாவர்.

நியமனப்பத்திரம் தாக்கல் செய்தபின்பு காரைதீவுக்கான சுயேச்சைக்குழுத்தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவிக்கையில்:

காரைதீவு ஊர்ப்பொதுமக்களின் தீர்மானத்திற்கமைவாக தெரிவான மகாசபையின் ஏகோபித்த முடிவுக்கமைவாக காரைதீவில் தமது இருப்பைத்தக்கவைப்பதற்காக கட்சிபேதமின்றி சுயேச்சைஅணியிலேயே இம்முறை போட்டியிடுவது என்ற ஊர்மக்களின் ஆணைக்கமைவாக இன்று நாம் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளோம்.

மிகவும் பலம் வாய்ந்த சமுகநோக்குடைய தரமான வேட்பாளர் குழுவைக்கொண்ட இச் சுயேச்சை அணி இம்முறை காரைதீவு பிரதேசசபையைக் கைப்பற்றும் என்பதில் பூரண நம்பிக்கை உள்ளது. மக்கள்தான் எமது சக்தி.

வீரத்தமிழ் விளைநிலமான கல்விக்குத்துறைபோய விபுலமுனி பிறந்த காரைதீவின் உதிரஉறவுகளுக்கு யாரும் இப்படித்தான் வாக்களிக்கவேண்டும்? யாருக்கு வாக்களிக்கவேண்டும்? என்று சொல்லத்தேவையில்லை. அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எத்தனை கட்சி வந்தாலும் எத்தனை சுயேட்சை வந்தாலும் ஊர்த்தீர்மானத்தின்படி களமிறங்கிய கறைபடியாத எமக்கு மக்களின் ஆதரவு 100வீதம் உண்டு.வெற்றி நிச்சயம் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்