15 வருடங்களாக அசைக்க முடியாத உயரத்தில் த்ரிஷா!

அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தில் அறிமுகமாகிய த்ரிஷா திரையுலகில் தன் 15 வருடங்களைப் பூர்த்தி செய்து, தொடர்ந்து வெற்றி நடை போடுகின்றார்.

முதல் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிடினும் அடுத்து விக்ரமுடன் ‘சாமி’, விஜய்யுடன் ‘கில்லி’ என்று ஆரம்பித்து பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதேநேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து அங்கும் முதல் இடம் பிடித்தார். கதாநாயகனுக்கு நிகராக த்ரிஷாவுக்கு திரையரங்க வாசலில் பெரும் ‘கட்-அவுட்’ வைத்து த்ரிஷாவை கொண்டாடினர் ரசிகர்கள்.

தொடர்ந்தும் வெற்றி நடை போட்ட த்ரிஷா, தொழிலதிபர் வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்தை அடுத்து சற்று திரையில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு பெரிய நடிகர்களுடனான வாய்ப்புக்கள் குறைந்தது.

ஆனால், அந்த திருமண பந்தம் முறிவுக்கு வரவே மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தினார். அவருக்கு தனுஷின் ‘கொடி’ படம் பெரிதாக கை கொடுத்தது.

தற்போது, ’96’, ‘சதுரங்க வேட்டை-2′, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறாக த்ரிஷா, தனது திரை உலக பயணத்தில் 15 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்