கோப்பை வென்றது இந்தியா.

விசாகப்பட்டனம்: மூன்றாவது ஒரு நாள் போட்டியில், ‘சுழலில்’ அசத்தினார் குல்தீப் யாதவ். பேட்டிங்கில் மிரட்டிய ஷிகர் தவான் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. இதன் மூலம் 2–1 என தொடரை வென்று, கோப்பையை கைப்பற்றியது. இலங்கை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டனத்தில் நடந்தது. இதில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இந்தியா களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் உடல்நிலை சரியில்லாத தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்குப்பதில், குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்றார்.

தரங்கா அரைசதம்: இலங்கை அணிக்கு குணதிலகா (13) ஏமாற்றினார். பாண்ட்யாவின் 9வது ஓவரில் வரிசையாக 5 பவுண்டரி விளாசிய தரங்கா அரை சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தபோது, சமரவிக்ரமா (42) ஆட்டமிழந்தார்.

குல்தீப் திருப்பம்: இந்த நேரத்தில், 28வது ஓவரில் வரமாக வந்தார் குல்தீப். ‘சைனாமேன்’ பவுலரான இவரது ‘சுழல்’ பந்தில், கண் இமைக்கும் நேரத்தில் துடிப்பாக செயல்பட்ட தோனி ‘ஸ்டம்பிங்’ செய்ய தரங்கா (95) வெளியேறினார். அதே ஓவரில் டிக்வெல்லாவையும் (8) அவுட்டாக்கிய குல்தீப் இரட்டை ‘அடி’ கொடுத்தார். தன் பங்கிற்கு சுழற்பந்துவீச்சாளர் சகால் ‘சீனியர்’ மாத்யூசை (17) அருமையாக போல்டாக்கினார். கேப்டன் திசரா பெரேராவையும் (6) வெளியேற்றினார் சகால்.

பரிதாப நிலை: பாண்ட்யா பந்தில் பதிராணா (7) அவுட்டானார். அகிலா தனஞ்செயா, லக்மல் தலா ஒரு ரன்னில் திரும்பினர். பின் வந்தவர்களும் ஏமாற்றினர். 160 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, அடுத்த 55 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டை பறிகொடுத்தது. இலங்கை அணி 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்தியா சார்பில் குல்தீப், சகால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ரோகித் ‘ஷாக்’: எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், 7 ரன்களில் அவுட்டாகி ‘ஷாக்’ தந்தார். பின் தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடினார்.

தவான் சதம்: அகிலா தனஞ்செயா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் இரண்டாவது அரை சதம் எட்டினார். மறுபுறம், இலங்கை பந்துவீச்சை தவான் விளாசினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி எளிதானது. இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தபோது, ஸ்ரேயாஸ் (65) ஆட்டமிழந்தார். குணரத்னே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான் ஒரு நாள் அரங்கில் 12வது சதம் எட்டினார். தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (100), தினேஷ் கார்த்திக் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை குல்தீப் வென்றார். தொடர் நாயகன் விருதை தவான் கைப்பற்றினார்.

‘4000’ ரன்கள்

நேற்று இந்தியாவின் தவான் 62 ரன் எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் 4000 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் (95) எட்டிய 6வது சர்வதேச வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (81 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (88), இங்கிலாந்தின் ஜோ ரூட் (91) உள்ளனர்.

* இந்திய வீரர்கள் அடிப்படையில் இந்த இலக்கை விரைவாக எட்டிய 2வது வீரரானார். முதலிடத்தில் இந்தியாவின் கோஹ்லி (93) உள்ளார். மூன்றாவது இடத்தை முன்னாள் கேப்டன் கங்குலி (105) வகிக்கிறார்.

6 வெற்றி

விசாகப்பட்டனம் மைதானத்தில் இந்திய அணி ஒரு நாள் போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை, இங்கு நடந்த 8 போட்டிகளில் இந்தியா 6 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.

தொடரும் வெற்றிநடை

கடந்த 2016ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1–4 என வீழ்ந்தது. இதன்பின், ஜிம்பாப்வே (3–0), நியூசிலாந்து (3–2), இங்கிலாந்து (2–1), வெஸ்ட் இண்டீஸ் (3–1), இலங்கை (5–0), ஆஸ்திரேலியா (4–1), நியூசிலாந்து (2–1) அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. நேற்று அசத்தியதன் மூலம், தொடர்ந்து 8வது ஒரு நாள் தொடரை வசப்படுத்தியது. தவிர, 2015க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழக்காமல் வலம் வருகிறது.

மகிழ்ச்சியில் ரோகித்

இந்தியாவின் ‘ரெகுலர்’ கேப்டன் கோஹ்லிக்கு இம்முறை ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால், ரோகித் அணியை வழிநடத்தினார். தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் வீழ்ந்தாலும், அடுத்தடுத்து போட்டிகளில் இந்தியாவுக்கு ரோகித் வெற்றித்தேடித்தந்தார். இதன் மூலம், கேப்டனாக களமிறங்கிய முதல் தொடரிலேயே கோப்பை வென்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

அடுத்து ‘டுவென்டி–20’

இந்தியா, இலங்கை அணிகள் அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி வரும் 20ல் கட்டாக்கில் நடக்கவுள்ளது. இதன் பின், இந்துார் (டிச. 22), மும்பையில் (டிச. 24) அடுத்தடுத்த போட்டிகள் நடக்கவுள்ளன.

ரோகித் முதலிடம்

இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் (3 போட்டி, 217 ரன்) முதலிடம் பெற்றார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே இந்தியாவின் தவான் (3 போட்டி, 168) , ஸ்ரேயாஸ் (3 போட்டி, 162) உள்ளனர்.

சகால் ‘டாப்’

இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் சகால் (3 போட்டி, 6 விக்.,) முதலிடம் பிடித்தார். இலங்கையின் திசரா பெரேரா (3 போட்டி, 5 விக்.,) இரண்டாவது இடம் வகிக்கிறார். மூன்றாவது இடத்தை இலங்கையின் லக்மல், இந்தியாவின் பும்ரா, பாண்ட்யா தலா 3 விக்கெட் கைப்பற்றி பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தப்பித்த சமரவிக்ரமா

போட்டியின் 14வது ஓவரை குல்தீப் வீசினார். இதில் சமரவிக்ரமாவுக்கு எல்.பி.டபிள்யு., முறையில் குல்தீப், தோனி உள்ளிட்டோர் ‘அவுட்’ கேட்டனர். அம்பயர் நிதின் மேனன் மறுத்தார். துவக்கத்தில் ஆணித்தரமாக இருந்த தோனி, பின் மனம் மாறியதால் ‘ரிவியூ’ கேட்கவில்லை. ஆனால், ‘டிவி ரிப்ளேயில்’ பந்து ‘ஸ்டம்சை’ தகர்ப்பது தெரியவந்தது. இதனால், சமரவிக்ரமா 15 ரன்களில் தப்பித்தார்.

தரங்கா ‘1000’

இலங்கை அணியின் தரங்கா 83 ரன்கள் எடுத்தபோது, ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டு ஆயிரம் ரன்களை எட்டிய 3வது வீரரானார். இதுவரை 25 போட்டியில் 1011 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் கோஹ்லி (26 போட்டி, 1460 ரன்), ரோகித் (21 போட்டி, 1293 ரன்) இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

8 தொடர்

இத்தொடருடன் சேர்த்து, கடைசியாக இரு அணிகளுக்கு இடையிலான 8 தொடரில் இலங்கை அணி 7 தோல்வி, ஒரு ‘டிரா’ (எதிர்– வங்கதேசம்) பெற்றுள்ளது. ஒரு முறை கூட கைப்பற்றவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்