முட்டை சாப்பிட்டா மாரடைப்பு வருமா?

முட்டை சாப்பிட்டா மாரடைப்பு வருமா?

முட்டை சைவமா அசைவமா என்ற சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை. அதற்காக, முட்டையை யாரும் தவிர்க்க வேண்டியதில்லை. இயற்கையான புரதச்சத்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் ஃபுட் முட்டை. இதைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுக்கலாம். இளம் வயதினர் தினமும் எடுத்துக்கொள்ளலாம். பெரியவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்வது நல்லது.

முட்டையில் ஒரு நாள் தேவையில் ஆறு சதவிகிதம் வைட்டமின் ஏ, ஐந்து சதவிகிதம் ஃபோலேட், ஏழு சதவிகிதம் வைட்டமின் பி5, 9 சதவிகிதம் வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ், 15 சதவிகிதம் வைட்டமின் பி2, 22 சதவிகிதம் செலீனியம் இருக்கிறது. இதுதவிர, வைட்டமின் டி, இ, கே, கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 77 கலோரியும், 6 கிராம் புரதச்சத்தும், 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் உள்ளது.

முட்டையில் அதிகக் கொழுப்புச் சத்து உள்ளதால் இதய நோய் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். இதில் உண்மையில்லை… இதில் இருப்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட நல்ல கொழுப்புக்கள்தான். எனவே, தினமும் எடுத்தாலும் கூட முட்டையால் இதய நோய் வராது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும். நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால், இதய நோய், பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைகிறது.

முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இதைத் தொடர்ந்து எடுப்பதன் மூலம் மனிதனின் வாழும் காலத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாகக் கர்ப்பிணிகள் முட்டை எடுத்துக்கொள்வதன் மூலம் சிசுவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அது அந்தக் குழந்தையின் வாழும் காலத்தை அதிகரிக்கும்.

முட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. இது உடல் தசைகள் கட்டமைப்புக்கு, பழுது நீக்கத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும், இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், உடல் எடை குறைப்புக்கும் உடல் எடையைப் பராமரிக்கவும் முட்டை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வளவு என்பது மருத்துவர், உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும். வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது என்பதால் பார்வைத் திறன் மேம்படுத்த உதவுகிறது.

முட்டையைப் பச்சையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதில், பாக்டீரியா உள்ளிட்ட தொற்று இருக்கலாம். எனவே, சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. அதேபோல், பெரியவர்கள், செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் இரவு நேரத்தில் முட்டையைச் சாப்பிட வேண்டாம். செரிமானம் ஆகத் தாமதம் ஆகும் என்பதால் காலை அல்லது பகல் நேரத்தில் எடுத்துக்கொள்வதே சிறந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்