சுகாதார சேவையின் சிகிச்சை தாமதங்கள்: மன்னிப்பு கோரினார் பிரதமர்

குளிர்கால நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை அனுமதிகளை தேசிய சுகாதார சேவை ரத்து செய்துள்ள நிலையில் அதற்காக நோயாளர்களிடம் பிரதமர் தெரேசா மே மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் தெரேசா மே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேசிய சுகாதார சேவைகளின் இத்தகைய நடவடிக்கை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பது எனக்கு நான்றாகவே தெரியும். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய சுகாதார சேவைகளின் பணிகள் விரைவில் மீளத்திரும்பும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நிலவும் குளிர்கால நெருக்கடிகளில் சுகாதார பராமரிப்பு முறைகளில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சுகாதார சேவையாக தேசிய சுகாதார அமைப்பு இயங்குகின்றது. இது பிரித்தானியாவின் நான்கு தேசிய சுகாதார சேவைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிலையில் பிரித்தானியாவில் தற்போது நிலவும் குளிர் காலநிலை காரணமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் அவசரமற்ற மருத்துவமனை அனுமதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை ரத்து செய்வதாக இவ்வார ஆரம்பத்தில் தேசிய சுகாதார சேவை அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 50 ஆயிரம் மருத்துவ சிகிச்சைகள் பிற்போடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்