‘மதுரை மல்லி! கடல் கடந்தும் மணக்கக் காரணம் என்ன?

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும் தான். ‘மதுரை மல்லி’, மதுரையில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. உலக அளவில் பிரசித்தி பெற்றது.

பொதுவாக, ‘மல்லி’ என்றால் பருத்தது, உருண்டது, தடித்தது எனப் பொருள் தரும். மதுரை மல்லியும் பருத்து, உருண்டு பார்க்க பளபளவென வெண்மையான நிறத்தில் காணப்படும்.

மதுரை மல்லி, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விளைகிறது. சந்தைகளில் மதுரை மல்லி எனச் சொல்லி விற்கப்படும் மல்லிகைப் பூக்கள் எல்லாமே, ‘மதுரை மல்லி’ ஆகாது.

மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லி மட்டுமே மதுரை மல்லிகை.

மற்ற மல்லிகை ஒரு நாளில் வாடிவிடும், ஆனால் மதுரை மல்லி, இரண்டு நாள்கள் வரை வாடாமல் தாக்குப்பிடிக்கும்.

மதுரையில் காலையில் பறிக்கும் மல்லிகைப்பூ, இரவு சிங்கப்பூரில் சந்தைக்குச் சென்று விடும். அந்த அளவுக்கு மதுரை மல்லிக்கு உலக அளவில் கிராக்கி இருக்கிறது.

இலங்கை ஒரு படிமேலே போய் கடந்த 2015-ம் ஆண்டு மலர் சாகுபடியை பெரிய அளவில் ஊக்குவிக்கும் விதமாக 30,000 மதுரை மல்லிகை நாற்றுக்களை இறக்குமதி செய்து பண்ணைகளில் வளர்த்தது. அந்த அளவுக்குக் கடல் கடந்து நிற்கிறது, மதுரை மல்லியின் சிறப்பு.

சாதாரண மல்லியின் மொட்டானது இரண்டு முதல் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும். மதுரை மல்லியின் இதழ்கள் வட்ட வடிவில் நான்கு அடுக்குகளைக் கொண்டது. அதனால் இம்மல்லியின் மொட்டுக்கள் தாமதமாகவே விரியும்.இதனால்தான் மனதை மயக்கும் நறுமணத்தைக் கொண்டிருக்கிறது.

இதுதவிர மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் மண் வளமும் மணத்துக்கு முக்கியக் காரணம். உலக அளவில் குவைத், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கும் மதுரை மல்லி ஏற்றுமதியாகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இந்த மல்லியின் தரம் மற்றும் சீசனைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும்.

வெளிமாநிலங்களுக்கு மதுரை மல்லியை நடுவதற்காக நாற்றுகளாகவும் அனுப்பப்படுகிறது. இதற்காக நாற்றுக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பதியம் செய்யப்படுகிறது.

இதற்காக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுரை மல்லி செடியின் கிளைகளை வெட்டி தங்கச்சிமடத்துக்கு அனுப்புகிறார்கள். அதன் பின்னர் அங்கு ஒரு வருடம் பதியம் செய்யப்பட்டு வேர்கள் அதிகமாக இருக்குமாறு பதியம் செய்யப்படுகிறது.

அதன் பின்னர்தான் இந்தியா முழுவதும் உள்ள மல்லிகை வியாபாரிகளுக்கு கட்டுக் கட்டாக அனுப்புகிறார்கள். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான் மல்லிகைப்பூ பதியம் போட ஏற்ற மாதங்கள்.

வெளிமாநிலங்களில் மதுரை மல்லிச் செடிகளை வாங்கும் விவசாயிகள் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்கிறார்கள். இதன் பின்னர் ஒன்றரை வருடங்கள் வளர்ந்த மல்லிகைச்செடி அதன் பின்னர் பூக்க ஆரம்பித்துவிடும்.

இது நான்கு வருடம் வரைக்கும் நன்றாகப் பூக்கும். மல்லிச் செடி மூன்று முதல் மூன்றரை அடி வரைக்கும் வளரும். ஆனால் மதுரை மல்லிச் செடி மட்டும்தான் அதிக உயரம் வளரும்.

ஜூன், ஜுலை மாதங்களில் மீண்டும் பதியத்துக்காக செடியை வெட்டி அனுப்புவார்கள். வெட்டிய செடி நான்கு மாதத்துக்குப் பின்னர் துளிர்விட ஆரம்பிக்கும். அடுத்த இரண்டு வருடம் மல்லிகை தனது உற்பத்தியைக் கொடுக்கும்.

ஆறு வருடங்களுக்குப் பின்னர் மதுரை மல்லி தனது உற்பத்தியை முழுமையாக நிறுத்தி விடும். மதுரை மல்லிகைப்பூ 3 தொன் தமிழ்நாட்டிலும், 4 முதல் 5 தொன் வரைக்கும் வெளிநாட்டிலும், 800 கிலோ வரைக்கும் வெளிநாடுகளுக்கும், 11 தொன் மல்லிகைப்பூ சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் அனுப்பப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்