ஷான், மிட்சல் மார்ஷ் சதம்; ஆஸ்திரேலியா வலுவான நிலையில்…

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்டில் ஷான், மிட்சல் மார்ஷ் சதம் கடக்க ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், ஆஸ்திரேலியா 3–0 என முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 479 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் (98), மிட்சல் மார்ஷ் (63) அவுட்டாகாமல் இருந்தனர்.

மிட்சல் சதம்:

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. சகோதரர்களான ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. இருவரும் சதம் கடந்தனர். கரான் ‘வேகத்தில்’ மிட்சல் மார்ஷ் (101) ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் 156 ரன் எடுத்தார். ஸ்டார்க் (11) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்திருந்தபோது, ‘டிக்ளேர்’ செய்தது. பெய்னே (38), கம்மின்ஸ் (24) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டோன்மேன் (0), அலெஸ்டர் குக் (10) ஏமாற்றினர். வின்சி 18 ரன்களில் திரும்பினார். மாலன் (5) ஒற்றை இலக்கில் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து 210 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் ரூட் (42), பேர்ஸ்டோவ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் இருவரும் சதம் கடந்தனர். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3வது சகோதரர்கள் என்ற பெருமை பெற்றனர். இதற்கு முன், இயான் சேப்பல், கிரேக் சேப்பல் மற்றும் ஸ்டீவ் வாக், மார்க் வாக் இந்த இலக்கை எட்டி இருந்தனர். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய 8வது சகோதர்கள் என்ற பெருமை பெற்றனர்.

முதல் பவுலர்

இப்போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து ‘சுழல்’ வீரர் மாசன் கிரேன், முதல் இன்னிங்சில் 48 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 193 ரன் விட்டுத்தந்தார். இதன் மூலம், அறிமுக டெஸ்டில் அதிக ரன் விட்டுத்தந்த முதல் இங்கிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனை படைத்தார். இதற்கு முன், டேவோன் 44 ஓவரில் 166 ரன் கொடுத்ததே அதிகமாக (எதிர்– ஆஸி., நாட்டிங்காம், 1989) இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்