ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு தொடர்பில் ஈழ அகதிகள் அதிருப்தி!

அகதிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்தியகுழு தம்மை காக்க வைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டதாக மண்டபம் அகதி முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அகதிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் பிரசாந்த் ஜித்தவே தலைமையிலான மத்திய குழு மண்டபம் பகுதிக்கு சென்று திரும்பிய பின்னர், அங்குள்ள எமது ஊடகவியலாளர் ஆதவன் செய்திப்பிரிவுக்காக மேற்கொண்ட செவ்வியின் போதே மக்கள் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதன் போது மேலும் தெரிவித்த அப் பகுதி மக்கள்,

“எங்களிடம் ஆய்வை மேற்கொள்ள வரும் குழுவினர் எம்மை சந்திக்கவில்லை. இங்குள்ள மக்களை ஒன்றிணைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றிருக்க வேண்டும்.

இன்று வந்தவர்களிடம் மனுக்கொடுப்பதற்காக காத்திருந்தோம் ஆனால் அவர்கள் எம்முடன் பேசாமல் திரும்பிவிட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருக்க முடியாமல் இங்கு கரைசேர்ந்த அகதிகள் நாங்கள். எங்களுக்கு இங்கு எல்லா உதவிகளும் செய்து தருகிறார்கள். குறைவிடவில்லை. ஆனால் வயதான காலங்களில் சொந்த இடத்திற்கு சென்று வாழ விரும்புகிறோம்.

கடவுச்சீட்டை செய்து கொள்வதற்கு எம்மிடம் பிறப்புசான்றிதழ் கேட்கிறார்கள். நாங்கள் அகதிகளாக வந்தவர்கள் எம்மிடம் எப்படி சான்றிதழ்கள் இருக்கும். ஆனால் அது இருந்தால் தான் கடவுச்சீட்டு செய்ய முடியும் எனக் கூறிவிட்டனர்”

இவ்வாறு மண்டபன் பகுதி மக்கள் குற்றம் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்