குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழப்பு..

குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழப்பு..

வட மேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 23 பேர் இறந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் ஏழு பேர் பொது மக்கள் என நம்பப்படுகிறது.

குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகாத நிலையில், இது கார் வெடிகுண்டு என சில தகவல்களும், ஆளில்லா விமானத் தாக்குதல் என சில தகவல்களும் கூறுகின்றன.

​சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இறந்தவர்களையும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

அஜ்னத் அல் கவாஸ்கு என்ற பெயரை கொண்ட போராளிக்குழுவில், நூற்றுக்கணக்கான போராளிகள் சிரியா இராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

துருக்கி எல்லையில் இருக்கும் இட்லிப் மாகாணம், ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தை எதிர்க்கும் படைகளின் கடைசி முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும்.

2015-ம் ஆண்டு இங்கு நடந்த சண்டையில், போராளி குழுவிடம் சிரியா இராணுவம் தோற்றது. சிரியா அரசை எதிர்க்கும் குழுவின் முழு கட்டுப்பாட்டின்கீழ் வந்த ஒரே மாகாணமாக இட்லிப் மாறியது.

இட்லிப் மற்றும் அண்டை ஹமா மாகாணத்தை மீட்பதற்கு சிரியாவும் அதன் கூட்டாளிகளும் உறுதியேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்